ஃபானி புயலின் நகர்வை மிக துல்லியமாக கண்காணித்து, உயிர் சேதங்களை குறித்த இந்திய வானிலை மையத்திற்கு UN பாராட்டு!!
வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் பலியாகினர். பல பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலத்தை கடந்தது.
இதில், சுமார் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வுகள் மிகச்சரியாக கணிக்கப்பட்டு, அது கரையை கடக்கும் பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். புயல் கரையை கடந்தபோது, பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டது.
இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் அவை, தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா பேரிடர் ஆபத்து குறைப்பு முகமை, ஃபானி புயலை, இந்தியா திறம்பட எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.
புயலின் நகர்வை இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து கூறியதாக தெரிவித்துள்ளது. புயலால் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்கிற இலக்கை, ஃபானி புயல் கரையை கடந்த போது, இந்தியா கிட்டத்தட்ட எட்டியுள்ளதாகவும், ஐ.நா அவை குறிப்பிட்டுள்ளது. சுமார் 11 லட்சம் பேரை 900 முகாம்களில் தங்க வைத்து, பெருமளவில் உயிரிழப்புகளை இந்தியா தவிர்த்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் ஆபத்து குறைப்பு முகமை பாராட்டியுள்ளது.