இந்தியாவில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. உத்திராகாண்டிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துள்ளது.
இந்நிலையில், பலத்த மழையுடன் கூடிய இடி மின்னலால் ஹரித்வாரில் (Haridwar) உள்ள ஹர் கி பௌரி (Har Ki Pauri) தாக்கப்பட்டது. இதில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. மின்மாற்றி அமைப்பான டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றும் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்போ அல்லது யாருக்கும் எந்த காயமுமோ ஏற்படவில்லை.
மின்னல் தாக்கியதால் டிரான்ஸ்ஃபார்மர் சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக அப்பகுதியில் மின்சாரம் வழங்கலில் தடை உள்ளது. இந்த சம்பவம் திங்களன்று இரவு நடந்தது.
ALSO READ: மும்முனை தாக்குதலில் சிக்கிய அஸ்ஸாம்… உதவிக்கரம் நீட்டுகிறார் மோடி..!!!
கடைசியாக கிடைத்த தகவல்களின் படி, உள்ளூர் காவல்துறை மற்றும் ஸ்ரீ கங்கா சபா தொண்டர்கள் இப்பகுதியில் சேதத்தை சரி செய்து இடற்பாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாத்ரீகர்கள் இப்போது பிரம்ம குண்டத்தை நோக்கி செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் முன்னர்தான் இம்மாநிலத்தின் பித்தோராகர் (Pittorgarh) மாவட்டத்தின் முன்சாரி பகுதியில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.