மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்!
நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கையைக் கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோன்று சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் இன்று நடத்த உள்ள பிரம்மாண்டமான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மோடி அரசுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தார். சந்திரபாபு நாயுடுவும் டெல்லியில் தங்கியிருப்பதால் அவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Posters put up across Delhi. West Bengal Chief Minister Mamata Banerjee is in the national capital today to join the opposition protest here today. pic.twitter.com/s9L6IcfW20
— ANI (@ANI) February 13, 2019
தேவகவுடா, தேசியவாத மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்,உள்ளிட்டோருடன் திமுக , சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க தலைவர்கள் டெல்லிக்கு வந்தவண்ணம் உள்ளனர். ராகுல்காந்தியை பங்கேற்க செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மமதா பானர்ஜி டெல்லி வருகையை ஒட்டி மமதா பானர்ஜியின் கார்ட்டூன் புகைப்படம் கொண்ட பதாகைகள் சாலைமுலுவதும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.