ஐபிஎல் 2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங்

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல் 11-வது சீசனின் 32 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 2, 2018, 07:40 PM IST
ஐபிஎல் 2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங் title=

இன்று (மே 2) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.

 


இன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல் 11-வது சீசனின் 32 லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி  டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

அஜிங்கிய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணிக்கிறது. இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் மூன்று ஆட்டத்தில் வெற்றியும், நான்கு ஆட்டத்தில் தோல்வியும் பெற்றுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிஎல்எஸ் (DLS Method) முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இன்றைய போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆட வேண்டி இருக்கும். இந்த அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 

 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் இரண்டு ஆட்டத்தில் வெற்றியும், ஆறு ஆட்டத்தில் தோல்வியும் பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கவுதம் காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து கேப்டனாக மும்பையை சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் பதவியேற்றார். தனது தலைமையில் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் அணிக்கு வெற்றி தேடி தந்தார். ஆனால் சென்னைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது டெல்லி அணி. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இனி நடக்கும் அனைத்து போட்டியிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், இல்லையென்றல் ஐபிஎல் கோப்பை வெல்வது எட்டாக்கனியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

 

இதுவரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதியதில் டெல்லி டேர்டெவில்ஸ் 6 வெற்றியும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் இன்று போட்டி நடைபெறும் பெரோஷா கோட்லா மைதானத்தில் ஆறு முறை மோதி உள்ள இரு அணிகளும் 3 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

எனவே இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி ஆகும். எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு அமையும். 

Trending News