தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வயது முதிர்வு, கடின உழைப்பு, கைரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை எடுக்கும் போதும், பிறபயன்பாட்டின் போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
ஆதார் அட்டையில் ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அடையாளம் எடுக்கப்படும். இந்த திட்டம் ஜூலை 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செயல்திட்டத்தை தயார் செய்வதற்கான கால அவகாசம் போதவில்லை என்பதால், ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது தனி நபர்களுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு அடையாளம் உறுதிப்படுத்துவதற்கு கூடுதலாக ஒரு வழிமுறையே வழங்குகிறது. அதே வேளையில் முகப்பதிவு அடையாள வழிமுறையை கருவிழிப்படலம், கைரேகை அல்லது ஒரு முறை கடவு எண் (ஓ.டி.பி), ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்தே மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சேவை பயோமெட்ரிக் சாதனத்தை வழங்கும் நிறுவனங்களுடன் தனித்துவ அடையாள ஆணையம் இணைந்து செயல்பட்டுள்ளது. இது வரை 119 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் சரா சரியாக 4 கோடி ஆதார் அடையாளமாக சரிபார்ப்புகள் நடைபெறுகின்றன.