இந்திய ரயில்வேயின் ‘சில’ பிரீமியம் ரயில்களும்... அதன் சிறப்பு அம்சங்களும்..!!

உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்திய இரயில்வே நாட்டின் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது. இதில், பல வித வசதிகளை கொண்ட சில பிரீமியம் ரயில்களும் அடங்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2024, 11:56 AM IST
  • வந்தே பாரத் ரயில் 15 பிப்ரவரி 2019 அன்று தொடங்கப்பட்டது.
  • தேஜஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் இலவச ரயில் பயணக் காப்பீடு வழங்கப்படுகிறது.
  • நாட்டின் முதல் தனியார் ரயில் 'தேஜாஸ் எக்ஸ்பிரஸ்' 24 மே 2017 அன்று தொடங்கப்பட்டது.
இந்திய ரயில்வேயின் ‘சில’ பிரீமியம் ரயில்களும்... அதன் சிறப்பு அம்சங்களும்..!! title=

இந்திய இரயில்வே ஆசியாவின் இரண்டாவது பெரிய இரயில் வலையமைப்பு. உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்திய இரயில்வே நாட்டின் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக கருதப்படுகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது. இதில், பல விதமான வசதிகளை கொண்ட சில பிரீமியம் ரயில்களும் அடங்கும். நாட்டின் பிரீமியம் ரயில்களில் ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத், ஹம்ஸஃபர், துரந்தோ, தேஜாஸ் ஆகியவை அடங்கும். இந்த ரயில்களின் கட்டணம் மற்ற ரயில்களை விட சற்று அதிகம் என்ற்றாலும், இவற்றில் பயணம் செய்வது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. 

ரயில் பெயர்கள் எதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகின்றன?

நாடு முழுவதும் இந்திய ரயில்வே மூலம் லட்சக்கணக்கான ரயில்கள் (Indian Railways) இயக்கப்படுகின்றன. இதில் பயணிகள், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் மற்றும் பிரீமியம் ரயில்கள் அடங்கும். ஒவ்வொரு ரயிலுக்கும் தனிப்பட்ட எண்கள் மற்றும் பெயர்கள் உள்ளன. ரயில்களின் பெயர்கள் மற்றும் எண்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பது பலர் மனதிலும் எழும் பொதுவான கேள்வி. ரயில்களின் பெயர்கள் அவை எங்கு தொடங்குகின்றன, எங்கு செல்கின்றன என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இது தவிர, இடம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் என்பதைப் போல், வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் வைத்து இந்த ரயிலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரீமியம் ரயில்களின் பெயர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

ராஜ்தானி ரயிலின் பெயரே நாட்டின் தலைநகரை மற்ற மாநிலங்களின் தலைநகரங்களுடன் இணைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பிரீமியம் ரயில்களில் ஒன்றாகும். இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளும் ஏசி வசதி கொண்டது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன.

ராஜ்தானி ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்கள்

நாட்டின் முதல் ராஜதானி எக்ஸ்பிரஸ் ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயில் 1969 ஆம் ஆண்டு ஹவுரா மற்றும் புது தில்லி இடையே இயக்கப்பட்டது. தற்போது 15க்கும் மேற்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிலோமீட்டர் மற்றும் சராசரி வேகம் மணிக்கு 130 கிலோமீட்டர். ராஜ்தானி எக்ஸ்பிரஸின் கட்டணம் மற்ற சாதாரண ரயில்களை விட சற்று அதிகம்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

தேஜஸ் எக்ஸ்பிரஸ்

நாட்டின் முதல் தனியார் ரயில் 'தேஜாஸ் எக்ஸ்பிரஸ்' 24 மே 2017 அன்று தொடங்கப்பட்டது. முதன்முறையாக இந்த ரயில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினல் மற்றும் கோவாவில் உள்ள கர்மாலி இடையே இயக்கப்பட்டது. அதன் பிறகு, படிப்படியாக மற்ற வழித்தடங்களிலும் தொடங்கப்பட்டது. நாட்டின் சிறந்த பிரீமியம் ரயில்களில் இதுவும் ஒன்று. விமானங்களைப் போலவே தேஜாஸ் எக்ஸ்பிரஸிலும் ஏர் ஹோஸ்டஸ்கள் உள்ளனர். தேஜாஸ் எக்ஸ்பிரஸில் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி வகுப்பு மற்றும் ஏசி நாற்காலி கார் வசதி உள்ளது. நாட்டில் மொத்தம் 4 வழித்தடங்களில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சிறப்பு அம்சங்கள்

தேஜாஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் இலவச ரயில் பயணக் காப்பீடு வழங்கப்படுகிறது. தேஜாஸ் எக்ஸ்பிரஸில் சிறப்பு வகை தானியங்கி கதவுகள், அட்டெண்டர் பட்டன், இருக்கைக்கு மேலே ப்ளாஷ் லைட் மற்றும் கேங்வேயில் உயர்தர கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு வாக்கி டாக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தரமான உணவும் வழங்கப்படுகிறது. தேஜஸ் ரயிலில் உணவு, சிற்றுண்டி மற்றும் குடிநீர் இலவசம். தேஜாஸ் எக்ஸ்பிரஸின் கட்டணம் மற்ற ரயில்களை விட மிக அதிகம். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் ரயில் 15 பிப்ரவரி 2019 அன்று தொடங்கப்பட்டது. முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புது தில்லி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்பட்டது.  அதி நவீன அதிவேக வந்தே பாரத் ரயில் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் புல்லட் ரயிலின் வேகத்தில் இயங்கும். வந்தே பாரத் ரயில்கள் சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 104 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள்

அதிவேக ரயிலான இது, மிகக் குறுகிய நேரத்தில் மணிக்கு 160 கிலோமீட்டரிலிருந்து மணிக்கு 200 கிலோமீட்டராக அதிகரிக்கிறது. வந்தேவுக்கு இந்தியாவில் தனி என்ஜின் கோச் இல்லை, ஆனால் மெட்ரோ ரயிலைப் போன்ற ஒருங்கிணைந்த இயந்திரம் உள்ளது. ரயிலில் தானியங்கி கதவுகள் உள்ளன. ரயிலில் முழுமையாக வைஃபை வசதி உள்ளது. இதனுடன், இருக்கைக்கு அடியில் மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் நாற்காலி கார்கள் உள்ளன. வந்தே பாரத் பயணிகளுக்கு உணவு, தண்ணீர், டீ மற்றும் காபி வசதி வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க |  ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு! இனி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கவலை இல்லை

 கரிப் ரத் எக்ஸ்பிரஸ்

இந்திய இரயில்வே சாமான்ய மக்களின் தேவையை மனதில் வைத்து, ரயில்வே அவ்வப்போது புதுமையான விஷயங்களைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் 2006-ம் ஆண்டு இந்திய ரயில்வே கரீப் ரத் ரயிலை ஆரம்பித்தது. இந்த ரயிலை தொடங்குவதன் நோக்கம் சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் 3ம் வகுப்பு ஏசி பயணத்தை வழங்குவதாகும். இதை அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைத்தார்.

கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பு அம்சங்கள்

முதல் 'கரிப் ரத்' எக்ஸ்பிரஸ் பீகார் மாநிலம் சஹர்சாவிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வரை இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் மற்ற வழித்தடங்களிலும் இயக்கப்பட்டது. தற்போது, ​​26  வழித்தடங்களில் கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படுகின்றன. கரிப் ரத் எக்ஸ்பிரஸின் அனைத்து பெட்டிகளும் மூன்று அடுக்கு ஏசி வசதி கொண்டது. மற்ற ரயில்களின் 3ஏசி கட்டணத்தை விட இதன் கட்டணம் மிகவும் குறைவு.  கரீப் ரத் எக்ஸ்பிரஸின் சராசரி வேகம் தோராயமாக 81 கிமீ/மணி, அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகும்.

சதாப்தி எக்ஸ்பிரஸ்

சதாப்தி எக்ஸ்பிரஸ் நாட்டின் பிரீமியம் ரயில்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ரயிலின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. உண்மையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 100வது பிறந்தநாளின் போது இது பெயரிடப்பட்டது. சதாப்தி என்றால் 100 ஆண்டுகள். இன்று, நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட ஜோடி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுகின்றன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்கள்

சதாப்தி எக்ஸ்பிரஸ் குறுகிய தூர வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. பொதுவாக இது 400 முதல் 500 கிலோமீட்டர் தூரம் கொண்ட இடங்களுக்கு இடையில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர். இந்த ரயிலில் பயணிகளுக்கு ஏசி வசதியுடன் காலை உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது. காபி மற்றும் தேநீர் வசதிகளும் கிடைக்கும். இதன் பெட்டிகள் அலுமினியத்தால் ஆனது, எனவே மற்ற ரயில்களின் பெட்டிகளை விட இவை மிகவும் இலகுவானவை. இந்த ரயிலின் பெட்டி கடந்த 2000ம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டது.

துரந்தோ எக்ஸ்பிரஸ்

இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல அதிவிரைவு ரயில்களை இயக்கி வருகிறது. அதில் ஒன்று துரந்தோ எக்ஸ்பிரஸ். துரந்தோ என்ற பெயர் பெங்காலி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது துரந்தோ எக்ஸ்பிரஸின் நிறமும் மிகவும் வித்தியாசமானது. இந்த ரயில் மஞ்சள் மற்றும் பச்சை கலந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இது பூக்கள் மற்றும் பறவைகளை சித்தரிக்கிறது.

துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பு அம்சங்கள்

முதல் துரந்தோ எக்ஸ்பிரஸ் 2009 இல் புது தில்லி மற்றும் சீல்டா ரயில் நிலையம் இடையே ஓடியது. அதன் பிறகு இந்த ரயில் மற்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டது. இந்த ரயில் பயணத்தை எளிதாக்குகிறது. தற்போது, ​​நாடு முழுவதும் 26  துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் பான வசதிகள் கிடைக்கும்.  இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிலோமீட்டர்.

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் 

இந்திய ரயில்வேயின் பிரீமியம் ரயில்களின் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடங்கும். ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் சிசிடிவி, ஜிபிஎஸ் சிறந்த பயணிகள் தகவல் அமைப்பு, தீ மற்றும் புகை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு  அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முதல் ஹம்சஃபர் ரயில் ஆனந்த் விஹார் மற்றும் கோரக்பூர் இடையே இயக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 68க்கும் மேற்பட்ட ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பு அம்சங்கள்

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸின் ஒவ்வொரு பெட்டிகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்தி, ஒவ்வொரு கேபினிலும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த ரயிலில் தீயணைப்பு எச்சரிக்கை அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. காபி விற்பனை இயந்திரத்துடன், உணவை சூடாக்கும் இயந்திரமும் ரயிலில் வழங்கப்பட்டுள்ளது. ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News