உலக புலிகள் தினம்: வீரத்தின் சின்னங்களான புலிகளைக் காப்போம்!!

வீரத்தின் உருவாய், கம்பீரத்தின் காட்சியாய், துணிச்சலின் சாட்சியாய் உலா வரும் விலங்குகள் புலிகள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 10:16 AM IST
  • இன்று உலக புலிகள் தினம்.
  • 2014 ஆம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ல் 2,967 ஆனது. – ஜாவ்டேகர்.
  • 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக புலிகள் தினம்: வீரத்தின் சின்னங்களான புலிகளைக் காப்போம்!! title=

வீரத்தின் உருவாய், கம்பீரத்தின் காட்சியாய், துணிச்சலின் சாட்சியாய் உலா வரும் விலங்குகள் புலிகள். அசாத்திய அறிவுத்திறன் கொண்ட விலங்காக ராஜ நடை போட்டு காட்டை சுற்றும் சூறாவளிகள் புலிகள்.

இன்று உலக புலிகள் தினம் (Global Tiger Day). புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புலிகளின் இனம் அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலக புலிகள் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு, ரஷ்யாவில், 13 நாடுகளால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவிப்பு கையெழுத்திடப்பட்டு, இந்த தினம் நடைமுறைக்கு வந்தது. புலிகள் அதிகமாகக் காணப்படும் நாடுகளின் தலைவர்கள், புலிகள் பாதுகாப்பு தொடர்பான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவிப்பில் கையெழுத்திட்டு, 2022 ஆம் ஆண்டளவில் உலகளாவிய புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தீர்மானித்திருந்தனர். கடந்த 100 ஆண்டுகளில் உலகம் சுமார் 97 சதவீத காட்டுப் புலிகளை இழந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ​​உலகம் முழுவதும் 3,000 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன.

இதற்கிடையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நான்காவது அகில இந்திய புலி மதிப்பீடு- 2018 இன் விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையில் 2014 முதல் 2018-க்குள், நான்கு ஆண்டுகளில் 741 அதிகரித்துள்ளது.

அறிக்கையின்படி, புலிகளின் பாதுகாப்பிற்காக ஐந்து மண்டலங்கள் செயல்படுகின்றன - சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளி நிலப்பரப்பு, மத்திய இந்திய இயற்கை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பு, வட கிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா சமவெளி நிலப்பரப்பு மற்றும் சுந்தர்பன்ஸ். 2014 ஆம் ஆண்டில், இந்த ஐந்து மண்டலங்களில் 2,226 புலிகள் இருந்தன, அவை 2018 இல் 2,967 ஆக உயர்ந்தன.

குறைவான நிலப்பரப்பு போன்ற பல தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவில் 80 சதவீத உயிர் பன்முகத்தன்மை உள்ளது. ஏனெனில் இயற்கை, மரங்கள் மற்றும் வனவிலங்குகளை காப்பாற்றும் மற்றும் பாதுகாக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் உள்ளது என்று ஜவடேகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். வனவிலங்குகள் நமது இயற்கை செல்வம் என்பதைக் குறிப்பிட்டு, உலகில் உள்ள மொத்த புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பது பாராட்டுக்குரியது என்றார். புலிகள் பராபரிப்பு குறித்து, இந்தியா புலிகள் அதிகம் உள்ள மற்ற 13 நாடுகளுடன் அயராது உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ALSO READ: உலக இயற்கை பாதுகாப்பு தினம்: இயற்கையை மதிப்போம், வளங்களைக் காப்போம்!!

2019 ஆம் ஆண்டு உலகப் புலிகள் தினத்தின்போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான தனது தீர்மானத்தை உலகிற்கு அறிவித்திருந்தார். 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவிப்பின் படி 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இன்றும் புலிகளை அவற்றின் தோல், நகம், பல் என பலவற்றிற்காக வேட்டையாடும் பல கும்பல்கள் உள்ளன. இவர்களிடமிருந்து இந்த மிருகங்களைக் காக்க பொது மக்களாகிய நாமும் ஒன்றுபட வேண்டும்.  

இந்தியாவைப் பொறுத்த வரை, புலி நம் நாட்டின் பெருமை. புலி தான் நம்முடைய தேசிய மிருகம் (National Animal). இந்திய புலிகள் அவற்றின் கம்பீரம் மற்றும் தோற்றத்திற்காக உலகெங்கிலும் புகழ் பெற்றவை. நம் தேசிய விலங்கான புலிகளைக் காப்போம். அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவோம்!!

Trending News