புதுடெல்லி: அமெரிக்காவின் விஸ்கான்சினில் (Wisconsin) உள்ள இரண்டு நண்பர்கள் - தாமஸ் குக் மற்றும் ஜோசப் ஃபீனி - 1992 இல் ஒருவருக்கொருவர் ஒரு வாக்குறுதி அளித்திருந்தனர். அவர்கள் இருவரில், எப்போதாவது யாராவது பவர்பால் ஜாக்பாட்டை வென்றால், லாட்டரி வெற்றியில் கிடைக்கும் பணத்தை மற்றவருடன் சரி பாதியாக பிரித்துக்கொள்வார்கள் என்பதுதான் அந்த வாக்குறுதி.
ஜூலை 10, 2020 அன்று தாமஸ் குக் 22 மில்லியன் டாலர் மதிப்புள்ள விஸ்கான்சின் பவர்பால் ஜாக்பாட்டை (Powerball Jackpot) வென்றார். அதோடு, தான் பெற்ற வெற்றித் தொகையில் பாதியை ஜோசப் ஃபீனியுடன் பகிர்ந்து கொள்வதற்கான தனது 28 ஆண்டு பழைய வாக்குறுதியும் அவருக்கு நினைவில் இருந்தது.
வியாழக்கிழமை விஸ்கான்சின் லாட்டரிக்கு அளித்த பேட்டியில் குக், டிக்கெட்டின் முதல் இரண்டு, மூன்று எண்களைப் படித்தவுடனேயே தான் உறைந்துவிட்டதாகக் கூறினார். பின்னர் டிக்கெட்டை அவர் தனது மனைவியிடம் கொடுத்தாகவும், அவரும் அதைப் பார்த்து அப்படியே ஆடிப்போய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
லாட்டரியை வென்ற பிறகு, குக் ஃபீனியை அழைத்து, வெற்றித் தொகையை பிரித்துக்கொள்வதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போவதாகக் கூறினார்.
இரு நண்பர்களுக்கும் இந்த வெற்றிக்கான எந்தவிதமான ஆடம்பரமான திட்டங்களும் இல்லை. எனினும், குடும்பத்துடன் அதிக நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கப் போவதாக அவர்கள் கூறியதாக விஸ்கான்சின் லாட்டரி வெளியீடு தெரிவித்துள்ளது.
சுமார் 16.7 மில்லியன் டாலர் தொகைக்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்த குக்கும் ஃபீனியும் கூட்டாட்சி மற்றும் மாநில வரிகளுக்குப் பிறகு, தலா 5.7 மில்லியன் டாலரை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ALSO READ: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...எண்ணமே செயலாகும்... சிந்தனையே சிறப்பாகும்..
1992 ஆம் ஆண்டில் விஸ்கான்சின் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியதிலிருந்து இது 18-ஆவது விஸ்கான்சினின் பவர்பால் ஜாக்பாட் வெற்றியாகும். 2019 மார்ச் மாதத்திற்குப் பிறகு பெறபட்டுள்ள முதல் ஜாக்பாட்டாகும் இது. அப்போது வெற்றியாளருக்கு, சரித்திரம் காணா அளவிற்கு 768.4 மில்லியன் டாலர் பரிசாகக் கிடைத்தது.