நடிகர் தனுஷ் தனது மகன் என சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் இன்று (ஏப். 12) காலமானார். அவருக்கு வயது 70 என கூறப்படுகிறது. கதிரேசன் மறைவு குறித்து அவரது வழக்கறிஞர் டைட்டஸை நாம் தொடர்புகொண்டோம். அப்போது, கதிரேசன் தனது கடைசி காலத்தில் கடுமையான பொருளாதார சூழலில் இருந்ததாகவும், அவரின் மனைவி மீனாட்சியும் கடுமையான சூழலில் இருப்பதாகவும் அவர்களின் வழக்கறிஞரான டைட்டஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து, தனுஷ் கதிரேசன் - மீனாட்சி தம்பதியரின் மகன்தான் என்பது அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றும் ஆனால் தற்போது வரை தனுஷ் உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்றும் அவர் கூறினார். மதுரை மேலூர்தான் தனுஷின் சொந்த ஊர் என்றும் உறுதியாக கூறினார்.
வழக்கறிஞர் கூறியது என்ன?
வழக்கறிஞர் டைட்டஸ் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பேசியதாவது,"தனுஷ் கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் மகன்தான். அது மேலூரில் உள்ள பலருக்கும் தெரியும். தனுஷ் உண்மையை கூற மறுக்கிறார். தற்போது கதிரேசன் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி மீனாட்சி கடும் மனக்கவலையில் உள்ளார். போனில் என்னிடம் பேசியபோது, 'இனி என்ன செய்வது...' என கண்ணீர் குரலில் கேட்டார்.
மேலும் படிக்க | இளையராஜாவாகவே மாறிய தனுஷ்... இணையத்தில் வைரலாகும் AI புகைப்படங்கள்!
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம். உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளோம். தனுஷ் மேலூரை சேர்ந்தவர், அவரின் சொந்த ஊர் அது என்பதால்தான் ஆடுகளம் திரைப்படத்தை அங்கு எடுத்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது கூட பல பள்ளி நண்பர்களை சந்தித்தார். இந்த வழக்கில் நீதித்துறையிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இருப்பினும், சட்டப்போராட்டத்தை தொடர்வோம். கதிரேசனுக்கு வந்த நிலைமை தனுஷிற்கு வரக்கூடாது என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்" என உருக்கமாக பேசினார்.
கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் சட்டப்போராட்டம்
கதிரேசன் - மீனாட்சி தம்பதிக்கு தனுஷ் மட்டுமின்றி மற்றொரு மகளும் இருப்பதாக வழக்கறிஞர் கூறினார். தனுஷின் தங்கை என கூறும் அவர் தற்போது திருமணமாக திருப்பூரில் வசித்து வருவதாகவும் வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.
மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகரான தனுஷ் தங்களது மகன்தான் என்று மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல்முறையாக மனு தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தார்.
அவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து பிரபல நடிகராகிவிட்டார் என்பது பிறகே தெரிந்தது எனவும் நடிகர் தனுஷ் தங்களுக்கு பெற்றோர் என்ற முறையில் பராமரிப்பிற்காக எங்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக கதிரேசன் - மீனாட்சியின் சட்டப்போராட்டம் தொடர்ந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிரேசன் தரப்பில் இருந்து மதுரை மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீது கடந்த மார்ச் 13ஆம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், "தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரேசன் - மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கே ஒரு அற்பத்தனமான வழக்கு, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றது" என குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், கதிரேசன் தரப்பு சட்டப்போராட்டத்தை தொடரும் என தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய தனுஷ்-வெட்கப்பட்ட ஐஸ்வர்யா! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ