Aavin vs Anbumani Latest News Updates: ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் பிளஸ் (Green Magic Plus) என்ற பெயரில், வைட்டமிண் ஏ மற்றும் வைட்டமிண் டி செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை வரும் டிச.18ஆம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த டிச. 12ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதில் ஆவின் நிறுவனம் பாலின் அளவையும் குறைத்து, விலையையும் அதிகமாக்கியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கடந்த டிச. 13ஆம் தேதி கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கு ஆவின் நிறுவனம் நேற்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், வெளிப்புற பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும், தற்போது குழந்தைகள், பொதுமக்கள் இடையே வைட்டமிண் ஏ மற்றும் வைட்டமிண் டி ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாகியுள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஆவின் நிறுவனம், அதனால்தான் 4.5% கொழுப்பு சத்து மற்றும் 9% இதர சத்துக்களுடன் வைட்டமிண் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற புதிய வகை பால் கொண்டு வரப்பட்டது என தெரிவித்துள்ளது.
ஆவின் கொடுத்த விளக்கம்
மேலும், கிரீன் மேஜிக் பிளஸ் பாலை சில்லறை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதன் சந்தையை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்திருக்கிறது. மேலும் சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மில்லி லிட்டர் பால் ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தற்போது விற்பனை செய்யப்படும் அனைத்து வகை பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பால் அறிமுகம்! #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @AavinTN @DinakaranNews pic.twitter.com/XIKApQ3fak
— TN DIPR (@TNDIPRNEWS) December 15, 2024
மேலும் படிக்க | கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரள பம்பர் லாட்டரி டிக்கெட் இன்னும் விற்பனைக்கு வராதது ஏன்?
இந்நிலையில், ஆவினின் இந்த விளக்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விலை ஏற்றமா எனவும் ஆவின் நிறுவனமும், திமுக அரசும் யாரை ஏமாற்ற முயல்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றஞ்சாட்டும் அன்புமணி
இதுகுறித்து அன்புமணி அவரது X பக்கத்தில்,"காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தேன். அது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறியிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் விளக்கம் நகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது" என சாடி உள்ளார்.
மேலும் அவர், "ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விட்டு, அதற்கு சில்லறைத் தட்டுப்பாடுதான் காரணம் என்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மி.லி., 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும், ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மிலியாக மாற்றி 20 ரூபாய் என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மிலியாக உயர்த்தி ரூ.25 என விலை நிர்ணயித்து இருக்கலாம்.
சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விலை ஏற்றமா? யாரை ஏமாற்ற முயல்கிறது ஆவின் நிறுவனமும் திராவிட மாடல் அரசும்!
காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 15, 2024
'கட்டுக்கதைகள்'
ஆனால், பாலின் அளவையும் 50 மிலி குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? மக்களை ஏமாற்றும் வகையில் மிகப்பெரிய மோசடியை செய்து விட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மேலும், மேலும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையிலும் நியாயமல்" என குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மேலும், அதில்,"சில்லறைத் தட்டுப்பாடு என்ற ஒரு காரணம் போதாது என்று சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு சற்று அதிக கமிஷன் தரும் நோக்குடனும் விலை உயர்த்தப்படுவதாகவும் ஆவின் கூறியிருக்கிறது.
அரசுக்கும் ஆவினுக்கும் கோரிக்கை
அனைத்து வகை பால்களுக்கும் செய்யப்படும் குளிர்சாதன செலவினங்கள்தான் ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலுக்கும் ஏற்படும். பாலின் விற்பனை விலையை உயர்த்த அது எந்த வகையிலும் காரணமாக இருக்காது. சில்லறை விற்பனையாளர்களுக்கு கூடுதல் கமிஷன் என்பது, அதிக விலை கொண்ட பாலை முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்வதற்கான ஊக்குவிப்பே தவிர அது நியாயமான காரணம் அல்ல.
ஆவின் நிறுவனத்தின் இந்த விளக்கங்களையெல்லாம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது விநியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்" என ஆவினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ