Raghu Thatha Movie Review : தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகியாக விளங்குபவர், கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம், ரகு தாத்தா. இதை, புதுமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இதில், கீர்த்தியுடன் இணைந்து திவ்ய தர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலரே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு படத்திற்கும் கிடைத்ததா? இங்கு பார்ப்போம்.
கதைச்சுருக்கம்:
இந்தி திணிப்பு, கலாச்சார திணிப்பிற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணின் வாழ்வை காட்டியிருக்கிறது ரகு தாத்தா திரைப்படம். தனது போராட்டத்தில் அந்த பெண் வென்றாரா?
முழு கதை:
70களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணியம் பேசும் பெண்ணாக வளர்கிறார், கயல்விழி (கீர்த்தி சுரேஷ்). இந்தி திணிப்புக்கு எதிராக போராடி, தன் ஊரில் பிறந்த ஏக்தா சபாவை மூடும் அவர், அனைவருக்கும் முன்மாதிரியாக கெத்தாக வலம் வருகிறார். வங்கியில் வேலை செய்யும் இவருக்கு, திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. இருப்பினும், தனது தாத்தாவிற்காக திருமணத்திற்கு சம்மதிக்கிறார். வீட்டில் வரன் பார்க்க தொடங்குகின்றனர்.
யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக, தனக்கு நன்கு தெரிந்த தமிழ்செல்வனை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அவரும் அனைத்து ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தான் கல்கத்தாவிற்கு பணியிட மாற்றம் செய்து கொண்டு போவது தான் சரி என முடிவெடுக்கும் அவர், அதற்கான இந்தி பரீட்சையையும் எழுத முயற்சி செய்கிறார்.
ஒரு பக்கம், தான் இந்தி பயில்வது வெளியில் தெரிந்து விடுமோ என்று பயத்திலும் இருக்கிறார். இறுதியில் அவருக்கு திருமணம் நடந்ததா இல்லையா? இவர் இந்தி பயில்வது கிராம மக்களுக்கு தெரிந்ததா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதி கதை.
ஐடியா ஓகே.. ஆனால்…
ரகு தாத்தா படத்தை பொருத்தவரை, அதன் கதை என்னவோ பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் இருக்கிறது. ஆனால், படத்தை வெளிக்கொண்டு வந்த விதம் ரசிகர்களை சரியாக சென்று சேர்ந்ததா என்று கேட்டால், அதற்கான விடை குழப்பமாகத்தான் வரும். காரணம், அழுத்தமான திரைக்கதை இந்த படத்தில் மிஸ் ஆவதுதான். படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே கொட்டாவி விட வைக்கும் அளவிற்கு மெதுவாக செல்கிறது திரைக்கதை. பாதிவரை, “எப்போது இடைவேளை வரும்?” என்ன காத்திருக்கும் ரசிகர்கள், அடுத்த பாதையில் “எப்போ படம் முடியும்?”என்று காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு நம் பொறுமையை சோதிக்கிறது திரைக்கதை. இந்தி திணிப்பு மற்றும் கலாச்சார திணிப்பிற்கு எதிராக பேசும் யோசனை சரிதான் என்றாலும் அதை இன்னும் நேர்த்தியாக கொண்டு போயிருந்தால் ரசிகர்களை சரியாக சென்று சேர்ந்திருக்கும்.
மேலும் படிக்க | மொழி திணிப்பை பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்வர்-கீர்த்தி சுரெஷ்
சிரிப்பலை…
ரகு தாத்தா படத்தில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் சாதாரண காமெடி வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களை நன்கு ஈர்த்துள்ளனர். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ்க்கு அண்ணி பேசும், “500 ரூவா குடுத்தா ஆளையே தூக்கிருவான்..” இடத்தில் ரகளை. அதேபோல, கீர்த்திக்கு காதலனாக வருபவர் தான் ஒரு பிற்போக்குவாதி என காட்டிக் கொள்ளாமல் நடிக்கும் இடங்கள் கைதட்ட வைக்கின்றன. சில சமயங்களில் பெரும்பான்மையான ஆண்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் பாத்திரமாக தோன்றுகிறார். தேவதர்ஷினி கீர்த்தியுடன் சேர்ந்து பிறரை கலாய்க்கும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன.
வெறுப்பலை…
படம் முழுக்க, கீர்த்தி சுரேஷ்க்கு பல இடங்களில் கொடுத்த வசனங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பவர்ஃபுல் டயலாக்கும் வெற்றுப் பேச்சாக கலைகிறது. படம் 70களில் எடுக்கப்பட்டது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் சில சமயங்களில் “அந்த காலத்தில் இப்படி எல்லாம் இருந்ததா?” என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. திரைக்கதையில் ஏற்பட்ட தோல்வினால் நல்ல கதையையும் ரசிக்க முடியாதபடி இருக்கிறது.
கதாபாத்திரங்களின் பங்கு:
கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய் ஆகியோரின் கேரக்டர், இயல்பாக இருக்கிறது. இவர்களைத் தாண்டி, தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் ஸ்கோர் செய்கின்றனர். தான் இசையமைக்கும் படங்களில் ஏதேனும் ஒரு பாட்டை ஹிட் ஆக்கிவிடும் ஷான் ரோல்டன் இதில் ஏமாற்றி இருக்கிறார்.
மொத்தத்தில்…
பெண்ணியம் பேசுபவர்கள், இந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்கள், பெரியார் வழியில் நடப்பவர்கள், கொஞ்சம் பொறுமையோடு பார்த்தால் படம் பிடிக்கும் .
மேலும் படிக்க | இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ