அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்ட்டதாக கூறியுள்ளார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது:-
சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா? ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளி கொண்டு வர வேண்டும். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையான ஆம்பள. சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில் எதற்காக முதல்வராக வர வேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார். எம்எல்ஏ.,வின் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீருக்கு தான் உள்ளது என்றார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் கிராமத்தில்,கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை வீடு இருந்தது. இதனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தன்னிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கியது மட்டுமல்லாது, அதற்காக மிகக்குறைந்த தொகையையே தன்னிடம் அளித்ததாகவும் கங்கை அமரன் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்,கங்கை அமரனின் இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.