“எஸ்பிபி பாடகர் மட்டுமல்ல, மிகப் பெரிய பாடமும்கூட”... கோடிக்கணக்கான மனங்களை உறங்க வைத்தவரின் ஆன்மா அமைதியில் துயிலட்டும். ஆழ்ந்த அஞ்சலிகள் என்று பலரும் பலவிதமாக SPBக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர். அவற்றில் சில:
கூக்கூ என்று கூவும் குயிலை
குறிஞ்சி மலரில் வடிந்த இரசத்தை
பொட்டு வைத்த முகத்தை
பொத்தி வச்ச மல்லிகையை
பச்சை மலைப் பூவை
இயற்கை என்னும் இளைய கன்னியை
கடவுள் அமைத்து வைத்த மேடையை
இலக்கணம் மாறி இலக்கியம் ஆனதை
பூந்தளிர் ஆட பொன்மலர் சூடுவதை
அந்தி மழைப் பொழிவை
ஆயிரம் தாமரை மொட்டுகளை
மன்றம் வந்த தென்றலை
மலையோரம் வீசும் காற்றை
மாங்குயிலை பூங்குயிலை
வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகளை
சின்னமணிக் குயிலை
தேடும் கண் பார்வையை
பாட்டுத் தலைவன் பாடும் பாட்டை
அதோ வானிலே நிலா ஊர்வதை
பொன்மானே பாடும் சங்கீதத்தை
பூங்காற்று உன் பேர் சொல்வதை
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்வதை
குழந்தை பாடும் தாலாட்டை
கண்மணியின் காதல் என்பது கற்பனையை
பனிவிழும் மலர்வனத்தை
வானுயர்ந்த சோலையை
முத்துமணி மாலையை
தேன் சிந்தும் வானத்தை
ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்ததை
மழை தரும் என் மேகத்தை
கட்டில் மேலே கண்ட வெண்ணிலாவை
இராகங்கள் பதினாறு உருவான வரலாற்றை
எப்படிக் கேட்போம் இனி ? - என்று முகநூலில் கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் எழுதிய கவிதை அனைவரின் நெஞ்சையும் உருக்குகிறது.
ஒரு குரல் தன் ஒலியை நிறுத்திக் கொண்டது!
அந்த ஒலி பல குரல்களால் என்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும்.
உலகம் உயிருடன் இருக்கும் வரை உன் மூச்சு அடங்காது
எங்கள் பாடும் நிலாவே!!!!
என மற்றுமொரு எஸ்..பி.பியின் ரசிகர் எழுதியிருக்கிறார். ஆனால், பாடும் நிலா இனி பாடாது. ஆனால் தேய்பிறையாய் தேய்ந்து போகாமல், வளர்பிறையாய் என்றும் வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கும் இந்த பாடும் நிலா... இந்த நிலா இசை வானின் துருவ நட்சத்திரம். இசைக் கடலில் பயணிப்பவர்களுக்கு கலங்கரை விளக்கம்...