தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.
இதை தொடர்ந்து சமூக நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த ஆதார் வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதால் பயங்கரவாதம் மற்றும் வங்கி மோசடியை தடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மத்திய அரசின் கருத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் பேசுகையில்..!
பண மோசடியாளர்களை தடுக்க ஆதார் எண்ணை இணைப்பது மட்டும் தீர்வாகாது. மோசடி செய்பவர்களின் அடையாளங்கள் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பது வங்கிக்கு தெரியும். வங்கி அதிகாரிகள் மோசடியார்களுடன் கைகோர்த்து உள்ள நிலையில் எப்படி வங்கி மோசடியை தடுக்கும். ஆதார் எண்ணை வைத்து சிறிதளவுதான் மோசடிக்காரர்களை கட்டுப்படுத்த முடியும்.
ஒரு தனிநபரின் வங்கி பரிவர்த்தனைகளை ஆதார் தடுக்காது. அதேபோல் தான் வங்கி மோசடிகளையும் தடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி தீவிரவாதிகள் மொபைல் சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்களா?. இதில் பிரச்சனை என்ன என்றால், சில தீவிரவாதிகளை பிடிப்பதற்காக 120 கோடி மக்களின் மொபைல் போனை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்கிறீர்கள் என்று நீதிபதிகள் விசாரணையில் கூறினர்.