கஜா புயல் பாதிப்புக்கு மொபைல் நெட்வொர்க் மூலம் உதவி திரட்ட நடிகர் சிம்பு சொல்லும் புதிய யோசனை.....
கடந்த 16 ஆம் தேதி கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ்த்திரையுலகினரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
மேலும், நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்ச ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளனர். நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த வரிசையில், இயக்குநர் ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ மூலம் டெல்டா மக்களுக்கு உதவ செல் நெட்வொர்க் மூலமாக அனைவரும் உதவ புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, “டெல்டாவை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இதில் நிறைய பேர் உதவி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் உதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பது கேள்விக்குறிதான். நாம் எல்லோரும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம். மொபைல் போன் சேவையில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் நம் ஒவ்வொருவரிடமும் பணம் சேகரித்து அதை வெளிப்படையாக அறிவித்து அரசிடம் கொடுத்து உதவியில் ஈடுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
A nice thought and initiative by STR hope it all works out well #SaveDelta #uniteforhumanity #unitefordelta #STR pic.twitter.com/SFYsusYZs6
— Yuvanshankar raja (@thisisysr) November 21, 2018