நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கில் ஆஜராக உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மன், மீண்டும் நீதிமன்றத்துக்கே திரும்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டபோது, குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரின் தடையையும் மீறி, ஹெச்.ராஜா தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஊர்வலம் சென்றனர்.
#Arrest_HRaja
Proof pic.twitter.com/JsWpIgDO94— Mohammed Shaheeth (@mshahieeth1) September 16, 2018
இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, காவல்துறை மற்றும் நீதித்துறை குறித்து எச்.ராஜா அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்தது, இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு, வரும் திங்கட்கிழமை எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை வடபழனியில் உள்ள எச்.ராஜாவின் முகவரிக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற சம்மன், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததாக மீண்டும் நீதிமன்றத்துக்கே திரும்பியுள்ளது. இதனால், வரும் திங்கட்கிழமை எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவாரா என்பது கேள்விக்குறியாகி அமைந்துள்ளது!