இந்திய அணியில் வரப்போகும் எக்கச்சக்க மாற்றம்... இந்த வீரர் மட்டும் இருப்பார் - மிஷன் சாம்பியன்ஸ் டிராபி!

Indian Cricket Team: உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கருத்தில் கொண்டு இந்த வீரர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 21, 2023, 06:36 PM IST
  • 2027இல் அடுத்த உலகக் கோப்பை தொடர் நடக்கிறது.
  • அதற்கு முன் 2025இல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது.
  • இந்தியா 2013இல் கடைசியாக ஐசிசி கோப்பையை வென்றது.
இந்திய அணியில் வரப்போகும் எக்கச்சக்க மாற்றம்... இந்த வீரர் மட்டும் இருப்பார் - மிஷன் சாம்பியன்ஸ் டிராபி! title=

India National Cricket Team: இந்திய அணி கடந்த இரண்டு மாதங்களில் ஒரு பெரிய இலக்கை நோக்கிய பயணத்தில் சென்றது எனலாம். ஆனால் அந்த பயணம் எந்தவித இறக்கத்தையும் சந்திக்காமல் சென்றுகொண்டிருந்த நிலையில், கிளைமேக்ஸில் அதாவது உச்சியை அடையும் தருணத்தில் அப்படியே கீழே விழுந்துவிட்டது, ஆனால் அது நொருங்கி சிதறி மீண்டும் புதியவர்களுடன் இந்த பயணத்தை தொடங்குமா அல்லது சிதறிய நல்ல பாகங்களை மீண்டும் ஒட்டவைத்து பயணத்தை கிளப்புமா என்பதுதான் தற்போதைய இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருக்கும் பெரும் கேள்வி எனலாம். 

நடந்து முடிந்த இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி (Team India) 9 லீக் ஆட்டங்களிலும் தோல்வியே தழுவாமல் குறிப்பாக பெரிய தடுமாற்றங்களோ, சொதப்பல்களோ இல்லாமல் முதல் அணியாக நம்பர் இடத்தில் இருந்து அரையிறுதிக்கு சென்றது. அரையிறுதியில் நியூசிலாந்தை அணியை வீழ்த்தி 2019ஆம் ஆண்டு அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு பழியையும் தீர்த்துக்கொண்டது, அதில் பந்துவீச்சில் மட்டுமே சற்று பிரச்னைகள் வெளிப்பட்டன. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி அத்தனை போட்டிகளிலும் மறைத்துவைத்திருந்த பிரச்னைகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு, 1.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சூழ நடந்த அந்த போட்டியில் தோல்வியடைய நேரிட்டது. 

உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) தவறவிட்டதற்கு இறுதிப்போட்டியில் நடந்த சொதப்பல்களை மட்டும் கூறினால் இந்திய அணியின் பிரச்னைக்கு தீர்வுக்கு கிடைக்காது. ஒட்டுமொத்தமாக காணப்படும் பிரச்னைகளை எவ்வித சமரசமும் இன்றி அணுகினால் மட்டுமே ஒருநாள் அரங்கில் அந்த உட்சபட்ச கோப்பையை மீண்டும் வெல்ல இயலும். இந்திய அணி தரவரிசையில் நம்பர் 1 அணிதானே என்று நீங்கள் சொன்னாலும் அணியில் இருக்கும் சில பிரச்னைகளை நாம் இங்கு சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகும். அதாவது, இந்திய அணியின் தேவைகள் என்ன என்பதை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.

மேலும் படிக்க | இனி இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை... இறுதிப்போட்டிக்கு பின் எதிர்காலம் என்ன?

ஜோலிக்கும் ஆல்-ரவுண்டர்

ஹர்திக் பாண்டியாவின் (Hardik Pandya) காயம் இந்தியாவுக்கு எந்த போட்டியிலும் பாதகமாக அமையவில்லை, இறுதிப்போட்டியை தவிர. பேட்டிங் - வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் ஜோலிக்கும் ஒரு வீரரை இந்தியா வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹர்திக் நிச்சயம் அணியில் நீடிப்பார் என்றாலும் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை இந்தியா அடுத்த உலகக் கோப்பைக்குள் கண்டுபிடித்து அணியில் வைத்திருப்பது மிகப்பெரிய தேவையாகும். 

டாப் ஆர்டரில் ஓர் இடதுகை வீரர்

இந்த தொடரிலேயே நம்மிடம் இஷான் கிஷன் (Ishan Kishan) இருந்தார் என பலரும் சொன்னாலும் கூட அவருக்கு இன்னும் மிடில் ஆர்டரில் பல போட்டிகளை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஆசிய கோப்பையில்தான் மிடில் ஆர்டரிலேயே இறங்கி விளையாடினார். எனவே, சுப்மான் கில்லுடன் (Shubman Gill) ஓப்பனிங்கிலோ அல்லது 3,4ஆவது இடத்திலோ ஓர் இடதுகை வீரர் அவசியமாகும். இடதுகை வேகப்பந்துவீச்சு போன்றவற்றை சமாளிக்க என்பதற்காக மட்டுமல்ல ஒரு பெரிய தொடர்களில் ஷிகர் தவாண், யுவராஜ் சிங் ஏன் இந்த தொடரில் குவின்டன் டி காக் போன்றோர் செய்த அந்த பணியை ஒருவர் இந்திய அணியிலும் செய்ய வேண்டிய தேவை உள்ளது. 

திடமான அந்த நம்பர் 4 வீரர்

ஷ்ரேயாஸ் (Shreyas Iyer) நம்பர் 4இல் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், யாராலும் அதனை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. இருப்பினும், இந்தியாவுக்கு கோப்பையை வென்று தருமளவில் நம்பர் 4 இடத்தில் ஒரு அதிரடியும், நிதானமும் கலந்த வீரர் தேவை. ஒருவேளை ஷ்ரேயாஸ் ஒருநாள் அணியில் நம்பர் 3க்கு கூட செல்லலாம், இல்லையென்றால் வெளியேற்றப்படலாம். ஆனால், நம்பர் 4இல் மற்றொரு நிலையான வீரரை கண்டறிவது இந்தியாவின் உடனடி தேவையாகும்.

மேலும் படிக்க | இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? - டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிந்தது!

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்

2011இல் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல ஜாகிர் கான் முக்கிய துருப்புச்சீட்டாக விளங்கினார். ஆனால், அவரை விடவும் இந்த 2023 தொடரில் ஷமி (Mohammed Shami) சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இருப்பினும், அணி காம்பினேஷனில் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இடம்பெறாதது பெரிய பின்னடைவாகும். ஸ்டார்க், போல்ட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து முன்னணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரும் வேளையில் இந்தியாவும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரை வளர்ப்பது முக்கிய தேவையாகும்.

விராட்டும் சாம்பியன்ஸ் டிராபியும்...

அடுத்த பெரிய ஐசிசி தொடராக ஒருநாள் தொடரில் வர இருப்பது 2025ஆம் ஆண்டு பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன் டிராபி (ICC Champions Trohy 2023) தொடர்தான். இந்தியா தற்போது இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து இந்த தொடருக்கு இந்தியா சென்றாக வேண்டும், ஆனால் இந்த தேவைகளை முழுமையாக்க அந்த அணியில் விராட் கோலியின் தேவையும் உள்ளது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். 

அவர் ஏன் இன்னும் சாம்பியன்ஸ் டிராபி வரை தேவை என்றால் இந்த தொடரில் அவர் குவித்த ரன்கள் மட்டுமல்ல அவர் காட்டிய பொறுமையும், நிதானமும் முக்கியமாக அனுபவமும்தான். மேலே சொன்ன அத்தனை தேவைகளையும், பிரச்னைகளையும் சரிசெய்ய பல மாற்றங்களை தற்போதைய இந்திய அணி சந்திக்க நேரிடலாம், ஏன் கேப்டன் பொறுப்பும் கூட ரோஹித்திடம் (Rohit Sharma Captaincy Replacement) இருந்து வேறு யாருக்காவது மாறலாம். ஆனால், விராட் கோலி அடுத்த உலகக் கோப்பை விளையாடுவாரா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் அவர் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வரை விளையாட முடியும், விளையாட வேண்டும்.

ஏன் விராட் கோலி தேவை?

ஒருவேளை இந்தியா விராட் கோலியை (Virat Kohli) வைத்துக்கொண்டு அதனை நிறைவேற்றிவிட்டால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னரே ஓய்வு பெற்றுக்கொள்ளலாம், அதற்கு பின் அந்த உச்சியில் இருந்து அவரின் பணியை வேறொருவர் நிச்சயம் எடுத்துச் சென்று 2027 உலகக் கோப்பையையும் (ICC World Cup 2027) தூக்கிவிடுவார் எனலாம். அணி சுக்கு நூறாக நொறுங்கும்போது முக்கிய புள்ளி அதில் இணைந்திருக்க வேண்டும். அது தற்போது விராட் கோலிதான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க வாய்ப்பில்லை.  

மேலும் படிக்க | தோனிக்கு இருந்த திருமண ராசி ரோஹித்துக்கு இல்லையா... கிளம்பும் புது கதை - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News