ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன 'நச்' பதில்

GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2024, 07:41 PM IST
  • வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்தார்.
  • 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அதில் அடக்கம்.
  • ஆட்டநாயகனாக வில் ஜாக்ஸ் தேர்வு
ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன 'நச்' பதில்  title=

GT vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் 45வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49 பந்துகளில் 89 ரன்களையும், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ரன்களையும் அடித்திருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

10 பந்துகளில் 50 ரன்கள் 

தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 16 ஓவர்களிலேயே 201 ரன்கள் என்ற இலக்கை அடித்தது. குறிப்பாக, வில் ஜாக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்களை அடித்திருந்தார்.

மேலும் படிக்க | இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?

தொடக்கத்தில் விராட் கோலியுடன் ஓப்பனிங் இறங்கிய டூ பிளெசிஸ் 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 24 ரன்களை எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஆர்சிபி விக்கெட்டை இழக்காமல் சென்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், ஆர்சிபி 10வது இடத்திலும், குஜராத் 7வது இடத்திலும் உள்ளது. வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

வில் ஜாக்ஸ் ஆட்டம் குறித்து விராட்

போட்டி முடிந்த பின் விராட் கோலி பேசினார். அப்போது வில் ஜாக்ஸின் அதிரடி ஆட்டம் குறித்து கேட்டபோது அவர், "ஜாக்ஸ் பேட்டிங் செய்ய வந்தபோது தொடக்கத்தில் அவர் நினைத்தபடி பந்தை அடிக்க முடியவில்லையே என எரிச்சலடைந்தார். நிதானமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் உரையாடலாக இருந்தது. அவர் போட்டி செல்ல செல்ல அவர் எவ்வளவு அதிரடியாக விளையாடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். மோஹித்தின் அந்த ஓவர் (11வது ஓவர்) ஆட்டத்தை மாற்றியமைத்தது. நான் மறுமுனையில் நின்று அவரின் ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்" என்றார். 

தொடர்ந்து, ஆடுகளம் குறித்தும், இலக்கு குறித்தும் அவரிடம் கேட்டபோது,"நாங்கள் 19 ஓவர்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன், ஆனால் அதை 16 ஓவர்களிலேயே வென்றது மிகவும் அற்புதமானது. முதல் இன்னிங்ஸில் பந்து நன்றாக பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்ததால் விக்கெட் சிறப்பாக மாறத் தொடங்கியது" என்றார்.  

விமர்சனங்களுக்கு விராட் பதில்

மேலும், நடப்பு தொடரில் விராட் கோலி 500 ரன்களை தாண்டியது குறித்தும், இதுபோன்ற புள்ளிவிவரங்களை நீங்கள் கவனிப்பீர்களா என்ற கேள்விக்கு,"நிச்சயம் கவனிக்க மாட்டேன். 15 வருஷமா நான் அதை செய்றதுக்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் நன்றாக விளையாடுவது குறித்துதான் யோசிப்பேன், வெளியில் இருந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். எனது ஸ்ட்ரைக் ரேட் குறித்தும், நான் சுழற்பந்துவீச்சை மோசமாக விளையாடுகிறேன் என என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை பொறுத்த வரை அணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

ஆடுகளத்தில் இருந்து விளையாடும்போதே அதனை உணர முடியும். வெளியே இருந்து நீங்கள் ஆட்டம் மீதான யோசனைகள், வியூகங்களை பேசலாம், ஆனால் அங்கு நின்று விளையாடுவதுதான் முக்கியமானது. 

எங்களின் சுயமரியாதைக்காக நாங்கள் அதிகம் விளையாட விரும்புகிறோம், எங்களை ஆதரித்த ரசிகர்களுக்காக விளையாட விரும்புகிறோம். நடப்பு தொடரில் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும், இன்னும் நிறைய செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொடர்ச்சியாக முயல்வோம்" என்றார்.

மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News