DC vs SRH: ஹைதராபாத் அணியின் பிளேஆஃப் கனவு தகர்ந்தது; டெல்லி வெற்றி

இந்த வெற்றி மூலம் ஐபிஎல் 2021 புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு டெல்லி அணி முன்னேறியது. ஒன்பது போட்டியில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை பெற்றுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 22, 2021, 11:20 PM IST
DC vs SRH: ஹைதராபாத் அணியின் பிளேஆஃப் கனவு தகர்ந்தது; டெல்லி வெற்றி title=

புது டெல்லி: ஐபிஎல் 2021 இல் டெல்லி கேபிடல்ஸ் 7 வது வெற்றியைப் பதிவு செய்தது. இப்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை அடைந்துள்ளது. மறுபுறம், ஹைதராபாத் 8 போட்டிகளில் 7 இல் தோல்வியடைந்துள்ளது. இனி பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

மோசமான தொடக்கம்: 
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செய் அல்லது செத்து மடி என்ற நிலை இருந்தது. இந்த போட்டிக்கு முன்பு ஹைதராபாத் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இப்போது பிளேஆஃபில் நுழைய விரும்பினால், மீதமுள்ள 7 போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்திலும், இனி ஒரே தோல்விக் கூட இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழலில் இன்று களம் இறங்கியது. 

இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. 

டெல்லி அணி வெற்றி: 
ஐபிஎல் 2021 புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பேட்டிங்கை தொடங்கியது. மூன்றாவது ஓவரில் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் விக்கெட்டை டெல்லி கேபிடல்ஸ் இழந்தது. கலீல் அகமது அவரை 11 ரன்களில் அவுட் செய்தார். இதன் பிறகு, ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இரண்டு பேட்ஸ்மேன்களும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அற்புதமாக பேட்டிங் செய்த ஷிகர் தவான் 43 ரன்கள் எடுத்த நிலையில், ரஷித் கானின் பந்திற்கு பலியானார்.

 

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) அற்புதமாக விளையாடி 41 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். அதேபோல அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 35(21) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியாக 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணிக்கு முதலிடம்:
இந்த வெற்றி மூலம் ஐபிஎல் 2021 புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு டெல்லி அணி முன்னேறியது. ஒன்பது போட்டியில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை அந்த அணி பெற்றுள்ளது.

 

ஹைதராபாத் அணியின் செயல்பாடு: 
ஹைதராபாத் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் முதல் ஓவரில் அவுட் ஆனார். ஹைதராபாத் அணியில் அப்துல் சமத் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்தார். அதற்கு அடுத்து ரஷித் கான் 22 ரன்கள் அடித்தார். சாஹா மற்றும் வில்லியம்சன் 18-18 ரன்கள் எடுத்தனர். சாஹா 18 ரன்கள் எடுத்த பிறகு ரபாடாவிடம் பலியானார். கேப்டன் வில்லியம்சன் 26 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். மணீஷ் பாண்டே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதர் ஜாதாவால் அதிகம் செய்ய முடியவில்லை மற்றும் 3 ரன்கள் எடுத்த பிறகு பெவிலியன் திரும்பினார். ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ககிசோ ரபாடா 3 விக்கெட்:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நோர்கியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நோர்கியா 4 ஓவரில் வெறும் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஷரும் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News