அப்போ... நான் வெளிய உட்காரவா...' - கோலி சதத்திற்கு பின் கொந்தளித்த கேஎல் ராகுல்!

KL Rahul Vs Virat Kohli:  யாராவது சதம் அடித்தால் மட்டுமே ஃபார்மில் உள்ளார் என நினைக்கிறோம். விராட் சதமடிக்கவில்லை என்றாலும், அவரின் பங்களிப்பு கடந்த 2-3 ஆண்டுகளில் அணியில் அளப்பரியது.

Written by - Sudharsan G | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2022, 03:50 PM IST
  • சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதமடித்த விராட் கோலி.
  • அதிரடி காட்டிய ராகுல் அரைசதம் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி.
  • விராட்டின் பங்களிப்பு கடந்த 2-3 ஆண்டுகளில் அணியில் அளப்பரியது.
அப்போ... நான் வெளிய உட்காரவா...' - கோலி சதத்திற்கு பின் கொந்தளித்த கேஎல் ராகுல்! title=

விளையாட்டு செய்திகள்: சுமார் 1020 நாள்களுக்கு பின், இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி அவரது சர்வதேச சதத்தை, ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் (செப். 8) பதிவு செய்தார். இது அவரது 71ஆவது சர்வதேச சதம் என்பது மட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதமாகும். இதனால், இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் விராட் கோலியின் இந்த சதத்தை உச்சிமுகர்ந்து வருகின்றனர்.

கேப்டன் ராகுல்

ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் வெளியேறிவிட்ட நிலையில், நேற்றைய போட்டி சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது. இதனால், ரோஹித் சர்மாவுக்கு நேற்று ஓய்வளிக்கப்பட்டது. கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு கேஎல் ராகுலுடன் சேர்ந்து விராட் கோலி ஓப்பனராக களமிறங்கினார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 119 ரன்களை குவித்து அசத்தியது. இதில், கேஎல் ராகுல் 62(41) ரன்களை எடுத்திருந்தார்.

மேலும் படிக்க: விராட் கோலியின் ஒரு சதம்; அனுஷ்கா சர்மா முதல் டிவில்லியர்ஸ் வரை கொடுத்த ரியாக்ஷன்

கேஎல் ராகுல், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சமீபத்தில் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு, கடந்த மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் இந்திய அணியில் மீண்டும் இணைந்தார். இதைத் தொடர்ந்து, ஆசிய கோப்பை தொடரில் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர், இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதும் ரன்களை குவிக்க திணறி வந்தார்.

மேலும், சூப்பர் - 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் சற்று அதிரடி காட்டிய ராகுல், நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்தார். தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய கேப்டன் என்ற முறையில் கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். 

விராட் ஓப்பனரா...?

அப்போது, அவரிடம், 'ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியை எடுத்துக்கொண்டாலும் சரி, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அவர் விளையாடியதை எடுத்துக்கொண்டாலும் சரி, ஓப்பனராக இறங்கும்போது தான் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறாரோ?' என செய்தியாளர் கேள்வியெழுப்பினார். குறிப்பாக, விராட் கோலி ஐபிஎல் தொடரில் அடித்த 5 சதங்களுமே, அவர் ஓப்பனராக அடித்தது என்பது நினைவுக்கூரத்தக்கது. இதற்கு ராகுல், "அப்படி என்றால், நான் வெளியே உட்கார வேண்டுமா..." என செய்தியாளரை நோக்கி எதிர்கேள்வியை எழுப்பினார். 

மேலும் படிக்க: ’திரும்ப வந்துட்டேனு சொல்லு’ சதமடித்து ஆப்கானிஸ்தானை கலங்கடித்த விராட் கோலி

தொடர்ந்து பேசிய அவர், "விராட் கோலி ரன்களை குவிப்பது அணிக்கு மிகப்பெரிய பலம் தான். ஆப்கன் போட்டியில் விராட் விளையாடிய விதத்தைக் கண்டு அவரே மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் தொடர்ந்து, சிறப்பாக பயிற்சி எடுத்து வந்த காரணத்தினால், தற்போது சிறப்பாக ஆடியுள்ளார். நீங்கள் 2-3 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலே உங்களுக்கு தானாக நம்பிக்கை வந்துவிடும்.

விராட்டின் பங்கு என்ன?

விராட் கோலியை உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும், ஓப்பனிங் இறங்கினால்தான் அவர் சதம் அடிப்பாரா என்ன? மூன்றாவது வீரராக இறங்கினாலும், அவர் சதம் அடிப்பார். இவையனைத்தும் அணியில் ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை பொறுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விராட் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். அடுத்த தொடரிலும் அவர் விளையாடுவார். அதில் அவரின் பங்கு என்பது வேறாக இருக்கும்" என்றார்.

விராட்டின் கொண்டாட்டம் மிகவும் நிம்மதியை அளித்தது. கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது மனநிலை, அணுகுமுறை போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஆட்டத்திற்குத் தயாராகும் விதத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. அவருக்கு எப்போதுமே அந்த மூன்று இலக்கங்கள் மீது ஆசை உண்டு. நாமும் எண்களின் மீதுதான் மிகவும் பிடிவாதமாக இருக்கிறோம். யாராவது சதம் அடித்தால் மட்டுமே அவர் ஃபார்மில் உள்ளார் என நினைக்கிறோம். ஆனால், விராட் சதமடிக்கவில்லை என்றாலும், அவரின் பங்களிப்பு கடந்த 2-3 ஆண்டுகளில் அணியில் அளப்பரியது.

மேலும் படிக்க: ஆப்கானிஸ்தான் கேப்டனின் கோபம்; ரசிகர்கள் ரகளை; யுஏஇ கடும் எச்சரிக்கை

எங்கள் யாருக்கும் ஆச்சர்யமில்லை

ஒரு வீரராக, நீங்கள் எப்போதும் நேர்த்தியானவராக இருக்க விரும்புவீர்கள் அல்லது சிறப்பான இடத்தை நோக்கி முன்னேற நினைப்பீர்கள். விராட் எப்போதும் நேர்த்தியான வீரராகவே இருந்து வருகிறார். இந்த 2-3 ஆண்டு காலக்கட்டத்தில் கூட, அவர் இதே மனநிலையில் தான் இருந்தார். தொடர்ந்து தனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்திய அவர், தற்போது இந்த தருணத்தை எட்டிப்பிடித்துள்ளார். அவரின் இத்தகைய செயல்பாடு எங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினை.

விராட் சதமடித்து, டிரஸ்ஸிங் ரூமில் இருந்த எங்கள் யாருக்கு ஆச்சர்யமளிக்கவில்லை. இது அவருக்கு இன்னும் கூடுதலான நம்பிக்கையை அளித்திருக்கும் என நான் நம்புகிறேன். இந்த சதத்தை அவர் நிச்சயம் கொண்டாடுவார். எங்களின் அணியினருக்கும் இது பெரும் நம்பிக்கையை அளிக்கும்" என்றார்.

விராட் கோலி, நேற்றைய போட்டியில், 61 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை குவித்து, டி20 அரங்கில் 3500 ரன்களை விரைவாக  கடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Asia Cup2022: இவரை களமிறகியது தவறில்லை: ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக ரோகன் கவாஸ்கர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News