உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து உஸ்மான் கவாஜா, காயம் காரணமாக விலகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக மாத்யூ வேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவுக்கு இடது கால் தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய இவர், வரும் 11-ஆம் நாள் பர்மிங்காமில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பங்கேற்கமாட்டார் எனவும், இவருக்கு பதிலாக மாத்யூ வேட் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது மார்கஸ் ஸ்டாய்னிஸ், இடுப்பு பகுதியில் லேசான காயமடைந்தார். இவருக்கு மாற்றாக, மிட்சல் மார்ஷ் அழைக்கப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய ஏ அணியில் விளையாடுவதால் இங்கிலாந்தில் தான் உள்ளனர். எனவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக அவதியில் இருக்கும் இருவருக்கும் நேற்று ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பின்னர் தான் அவர்கள் தொடரில் தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.
இவர்களுக்கு முன்னதாக இத்தொடரில் கை ஏற்பட்ட காயம் காரணமாக ஷான் மார்ஷ் வெளியேறினார். அவருக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா அணியில் முக்கியமான வீரர்கள் இருவரது விலகல் ஆஸ்திரேயா அணிக்கு பெரும் சருக்கலாய் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.