ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். என்ஜினீயரான இவர் கனடா நாட்டில் வேலை பார்க்கிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ள நிலையில் பச்சையப்பன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருக்கையில் பச்சையப்பன் 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்து திருமண இணையதளம் ஒன்றில் விளம்பரம் கொடுத்திருந்தார். விவாகரத்தான அல்லது கணவரை இழந்த விதவைப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக அந்த விளம்பரத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | பண மோசடி ? : முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு முன் ஜாமீன்
அதைப்பார்த்து சென்னை பெரம்பூர் சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவர் பச்சையப்பனை செல்போனில் தொடர்புகொண்டு தனது தங்கை விதவை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துவிட்டதாகவும் கூறினார். மேலும் தனது தங்கையிடம் பேசும்மாறு செல்போனில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் செந்தில் பிரகாஷே தங்கையை போல பெண் குரலில் பேசி உள்ளார். மேலும் தனது தங்கை என்று ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளார். அதை பார்த்த பச்சையப்பன் உண்மை என்று நம்பினார்.
ஒரு கட்டத்தில் செந்தில் பிரகாஷ் தனது தங்கை பேசுவது போல பெண் குரலில், பச்சையப்பனிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் தான் திருமணம் செய்யப்போகும் பெண்தானே என்று நம்பி பண உதவி செய்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக ரூ.1.5 கோடி வரை வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பச்சையப்பன் சென்னை வந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். செந்தில் பிரகாசிடம் உங்கள் தங்கையை நேரில் பார்க்க வேண்டும் அவருக்கு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார். உடனே பச்சையப்பன் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு செந்தில் பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு பச்சையப்பனை மிரட்டி அவர் வாங்கி வந்த எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களை அபகரித்து சென்றுவிட்டார். அப்போதுதான் செந்தில் பிரகாஷ் பெண் குரலில் பேசி மோசடி செய்ததும், செந்தில் பிரகாசுக்கு தங்கை யாரும் இல்லை என்பதும் அவர் பண மோசடிக்காக அவ்வாறு கபட நாடகம் ஆடியதும் பச்சையப்பனுக்கு தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் பச்சையப்பன் தனது மனைவியுடன் கோர்ட்டில் சமரசமாக பேசி மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பச்சையப்பன் செந்தில் பிரகாசின் மோசடி பற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை காவல்துறையினர் செந்தில் பிரகாஷை கைது செய்து பச்சையப்பனிடம் அவர் அபகரித்துச்சென்ற எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களையும் போலீசார் மீட்டனர். பச்சையப்பனிடம் மோசடி செய்த பணத்தை மீட்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கைதாகியுள்ள செந்தில் பிரகாஷ் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதை சரிகட்ட பச்சையப்பனிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR