அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்பு செய்யப்பட்டதை அடுத்து அவர் வகித்து வந்த இலாக்காகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது!
கடந்த 1998-ம் ஆண்டு நிகழ்ந்த பாகலூர், ஜி.மங்கலம் கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டதின் போது, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு தற்போது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி பாலகிருஷ்ண ரெட்டி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்றிரவு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் சந்தித்து பேசினார். அப்போது கடிதம் ஒன்றை ஆளுநரிடம் அவர் வழங்கியதாகக் தெரிகிறது. இந்த கடிதமானது பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதி இழப்பை முன்னிட்டு, அவர் வகித்து வந்த இலாகாக்களை வேறு அமைச்சருக்கு வழங்குவது குறித்த கடிதமாக இருக்கலாம் எற தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாலகிருஷ்ண ரெட்டியின் விலகல் கடித்தத்தினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் வகித்து வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.