புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவு காலத்தை நீட்டிக்கும் மாநிலங்களின் பட்டியலில் திங்களன்று புதுச்சேரி மாநிலமும் நுழைந்தது. ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிக்க அம்மாநில முதைவர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார்.
கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுப்பதாக அறிவிக்கப்பட்ட மூன்று வார ஊரடங்கு உத்தரவு காலம் நெருங்கி வருவதால், பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார்.
முன்னதாக தமிழகமும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதுக்குறித்து பேசிய முதலமைச்சர் கே பழனிசாமி, மருத்துவ மற்றும் பொது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
சனிக்கிழமை நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் இந்த மாத இறுதி வரை தடைகளை நீடிப்பதை அவர் விரும்புவதாக சுட்டிக்காட்டிய பழனிசாமி, மேலும் பல மாநில முதல்வர்களும் கட்டுப்பாடுகளை நீட்டிக்க கோரிக்கை வைத்ததாக கூறினார்.
ஊரடங்கு காலத்தை இந்த மாத இறுதி வரை நீட்டிக்க கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா ஏற்கனவே முடிவு செய்துள்ளன.