மின் கட்டண உயர்வு! கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் அதிமுக -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Electricity Tariffs in Tamil Nadu: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியேற்றுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 12, 2022, 05:21 PM IST
மின் கட்டண உயர்வு! கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் அதிமுக -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு title=

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் செப்டம்பர் 16ம் தேதி அதிமுகவின் அமைப்பு ரீதியாக இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது. மக்கள் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் "திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மின் கட்டண உயர்த்தியது மூலம் தாங்கிக் கொள்ள முடியாத கூடுதல் சுமையை தற்போது மக்கள் மீது ஆளும் திமுக அரசு சுமத்தியுள்ளது" என விமர்சித்துள்ளனர். அந்த வரிசையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியேற்றுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளார். அதுக்குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியதாவது:

விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க:  மின் கட்டண உயர்வால் இலவச மின்சாரம் கேள்விக்குறி - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கெனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள். 

திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, மின் கட்டண உயர்வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்தவிதமான முயற்சியையும் எடுக்காதபோதே, மின் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என்று பொய்யான பரப்புரையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்த திமுக, இன்றைக்கு ஆளுங்கட்சியாக வந்த பிறகு மக்கள் நலனை மறந்து இதுபோன்றதொரு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. "மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப, ஆட்சியில் இல்லாதபோது, `மக்கள் நலம், மக்கள் நலம்’ என்று கபட நாடகத்தை அரங்கேற்றிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தம் மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளது அரசு - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியில், மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மடிக் கணிணி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவித் தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிய அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.

மாறாக இந்த விடியா திமுக அரசு, அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முடக்கியதோடு, சொத்து வரியையும், மின் கட்டணத்தையும் உயர்த்தி, இன்றைக்கு மேலும் மக்களை துன்பக் கடலில் ஆழ்த்தி, என்றைக்குமே விடியாது என்ற நிலைக்கு இந்த அரசு சென்றுகொண்டிருப்பதை உணர்த்துகிறது. "மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும்" அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், 16.09.2022 – வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.  இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மற்ற மாநிலங்களைவிட குறைவுதான் -மின் கட்டணம் குறித்து அமைச்சர் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News