Jayakumar About Annamalai: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,"கட்சி ஏற்கனவே வலிமையாக இருக்கின்ற சூழ்நிலையில் அதனை மேலும் வலிமைப்படுத்துவதற்கு உண்டான வழிமுறைகள் எல்லாம் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒரு நிறைவான எண்ணத்துடன், ஒரு மகழ்சியான மனதுடன் செயற்குழு எழுச்சியோடு நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்" என்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:
கேள்வி: கர்நாடக தேர்தல் குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா?
பதில்: கர்நாடகாவில் அதிமுக போட்டிடுவது குறித்து பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து பொதுச்செயலாளர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். இது தொடர்பாக செயற்குழு பொதுச்செயலாளருக்கு அதிகாரத்தை அளித்துள்ளது. எனவே இதுதொடர்பாக அவர் முடிவை அறிவிப்பார்.
கேள்வி: பாஜக அதிமுக குறித்து கடுமையான விமர்சனம் வைத்துள்ளதே?
பதில்: அண்ணாமலை பாஜக தலைவர். அவர் ஒரு கருத்தை சொல்கிறார். அதற்கு அதிமுகவின் சார்பில் நான் பதில் சொல்கிறேன். அதுபோல அதிமுக நிர்வாகிகள் கருத்து சொன்னார்கள். பொதுச்செயலாளர் இதுகுறித்து அழகாக ஒரு கருத்தை சொன்னார், அரசியல் முதிர்ச்சி வேண்டும். என்றுடைய சர்வீஸ் 50 வருடம். இங்கு இருப்பவர்களின் சர்விஸ் சுமார் 30 வருடங்கள். அவருக்கு அரசியலில் அனுபவம் 2 வருடம்தான். அரசியலில் கத்துகுட்டி என்று சொல்லாம். அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் குறித்து நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார் பொதுச்செயலாளர். அதைதான் நானும் சொல்ல முடியும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. இது கூட்டணி.
நீங்கள் திமுக மீது குற்றச்சாட்டு வையுங்கள். திமுக என்பது குடும்ப ஆதிக்கம், ஊழலில் திழைத்து, ஊழலில் உருவெடுத்து ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி. ஊழலுக்கு சொந்தகார இயக்கம் என்றால் திமுக. அதனை தோலுறியுங்கள். எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாய் எங்கள் மீது ஏன் வருகிறீர்கள். வளர்த்த கடா மார்பில் பாயக்கூடாது. அது கிடவாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும் சரி எங்களை பொறுத்தவரையில் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
அண்ணமலை என்ன பேயா, பூச்சாண்டியா, பிசாசா, எத்தனையோ பார்த்துவிட்டோம். கருணாநிதி காலத்திலே அவ்வளவு அடக்குமுறைகள் செய்தார்கள். கட்சியை ஒழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். எவ்வளவு வழக்குகள், எவ்வளவு பிரச்சனைகள். ஆனால் அதனை எல்லாம் தாண்டி அதிமுக மிகப்பெரிய மாபெரும் இயக்கமாக உருவெடுத்து இன்றும் சரி, இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் சரி வெற்றி நடைபோடும் இயக்கம் அது அதிமுகதான். அதனால் நாங்கள் பயப்படவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. எந்த காலத்திலும் அதிமுக தொண்டனுக்கு பயம் என்பது கிடையவே கிடையாது.
கேள்வி: மதுரையில் மாநாடு போடுவதற்கு ஏதாவது காரணம் உண்டா...?
பதில்: அது அதிமுக நிர்வாகிகள் முடிவு எடுத்த விஷயம். தமிழ்நாட்டுக்கு ஒரு மையப்பகுதி என்ற அடிப்படையில் முடிவு செய்துள்ளார்கள். எங்களுடைய தலைவர்கள் எம்ஜிஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி மதுரையில் மாநாடு நடத்தியுள்ளார்கள். மதுரையை மீட்ட சுந்தபாண்டியன் என்ற அடிப்படையில் கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் மாநாடு நடக்கும்போது தமிழகத்தை மீட்டெடுக்கின்ற நிலை கண்டிப்பாக வரும்.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் அங்கு சென்றுள்ளார் என்று மதுரையில் மாநாட்டை அறிவித்துள்ளீர்களா?
பதில்: 'ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டினால் எப்படி, நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அதிமுகவின் ஊழல் பட்டியல்! தனித்தனியாக வெளியிடப்படும் - புகழேந்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ