நிலக்கரி இறக்குமதி; அதிமுக கொள்ளையடிக்க முயற்சி -MK ஸ்டாலின்!

டெண்டர் விடாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யவதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 11, 2018, 03:35 PM IST
நிலக்கரி இறக்குமதி; அதிமுக கொள்ளையடிக்க முயற்சி -MK ஸ்டாலின்! title=

டெண்டர் விடாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யவதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி - இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும், அமைச்சர் திரு தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

டெண்டரே விடாமல், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

“கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கைலாகுத்தந்திரமாக தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் திரு தங்கமணி “மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறினார். ஆனால் முதலமைச்சரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்” என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள உள்ள நிலையில், அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் வந்தது?

“நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்?

அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்?

“காற்றாலை மின்சார ஊழல்” “நிலக்கரி கொள்முதல் ஊழல்” “மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின் “நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது.

ஆளத் தெரியாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த கொள்ளைக்குத் துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News