சென்னையில் இன்று நடைபெற்ற பாரதி பெருவிழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். இவ்விழாவில், முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயனுக்கு பாரதி விருதை வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.
வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் இன்று பாரதி பெருவிழா துவங்கியது. இதில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விமான நிலையத்தில் அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். தலைமைச்செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் துணை குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
மயிலாப்பூரில் நடைபெற்ற பாரதி பெரு விழாவில் பங்கேற்ற வெங்கையா நாயுடு, முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயனுக்கு பாரதி விருதை வழங்கினார். இதையடுத்து இவ்விழாவில் பேசிய அவர், தமிழ் கற்க தனக்கும் ஆர்வம் இருப்பதாக கூறினார். பாரதியார் பாடல்கள் மற்றும் கருத்துகளை தேசிய பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேளாண் பல்கலைக்கழக விழாவிலும் பங்கேற்கும் வெங்கையா நாயுடு, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஏர் அறிஞர் விருதை வழங்க இருக்கிறார்.