தருமபுரியில் பாஜக (BJP) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (Annamalai) கலந்து கொண்டார். சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யாமல் வெளிக்காட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தருமபுரி (Dharmapuri) மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் அண்மையில் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது. இந்த பெயரில் உள்ள நினைவாலயம் என்ற சொல்லால் பொருளே மாறுகிறது. எனவே, பாரத மாதா ஆலயம் அல்லது திருக்கோயில் என்று பெயர் மாற்றும்படி பாஜக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், ‘முந்தைய அதிமுக அரசு அரசாணை வெளியிட்டபோதும், நிதி ஒதுக்கிய போதும் நினைவாலயம் என்ற சொல்லை எதிர்க்காத பாஜக தற்போது மட்டும் ஏன் எதிர்க்கிறது’ என்று தற்போதைய செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் கேட்டுள்ளார்.
ஒரு வரலாற்று பிழை குறித்து கவனத்துக்கு கொண்டு வரும்போது, பெயர் மாற்ற கோரிக்கையில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக முந்தைய அரசை குறைகூறி அபத்தமாக பேசுகிறார் அமைச்சர். இன்னும் ஒரு மாதத்தில் பாரத மாதா நினைவாயலம் என்பதை அன்னை பாரத மாதா திருக்கோவில் என பெயர் மாற்றம் செய்யப்படவில்லை எனில், பாஜக சார்பில் மிகப்பெரிய அறப் போராட்டம் நடத்தப்படும். பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி (Social justice) நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால், தமிழகத்தில் பெரியாருக்கு முன்பாகவே சமூக நீதிக்காக பாடுபட்ட பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்களின் பணிகளை இளைய தலைமுறையினர் அறியும் வகையில், இருட்டடிப்பு செய்யாமல் வெளிக்காட்ட வேண்டும்! என பாஜக சார்பில் தெரிவிக்கின்றோம்.
காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் கர்நாடகா புதிய அணை கட்டும் நடவடிக்கையை தமிழக பாஜக ஏற்கெனவே எதிர்த்துள்ளது. இப்போதும் அதே நிலைப்பாடு தொடர்கிறது. மண்டி, இடைத்தரகர்கள் போன்றோரின் தலையீடு இல்லாமல் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை நேரடியாக விற்று லாபம் ஈட்ட வாய்ப்பையும், வழியையும் ஏற்படுத்தித் தருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள். இந்த சட்டத்தை தமிழகத்தின் உண்மையான விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை. கம்யூனிஸ்ட் விவசாயிகள் சிலர் தான் கட்சிக் கொடிகளுடன் ரயிலேறி டெல்லி சென்று அங்கு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் கண் துடைப்புக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார். இதனால் தமிழக விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கும். அதை ஒருபோதும் தமிழக பாஜக அனுமதிக்காது. இந்த சட்டங்களின் உண்மை நிலை குறித்து விவசாயிகளிடம் பாஜக விளக்கிச் சொல்லும்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் அண்ணாமலை தெரிவித்தார்.
ALSO READ : மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்! அச்சத்தில் மக்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR