தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா மிகுந்த உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் 18-ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை இந்த ஆடிப்பெருக்கு விழா குறிக்கும்.
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இக்காலத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். சிலர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
Cultural events were organised in Chennai yesterday as people gear up for #AadiPerukku festival. The festival will be celebrated on August 3. #TamilNadu pic.twitter.com/sVOy2qolYm
— ANI (@ANI) August 2, 2018
இறை வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடன் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
தமிழர்களின் குறிப்பிடத்தக்க விழாக்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆடிப்பெருக்கு விழாவனது இன்று தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது!