ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது ஆபத்தானது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக அந்த எண்ணெய் வயல்களை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. இது ஆபத்தானதாகும்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அறியப்பட்ட காவிரி படுகையை இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலமாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் விருப்பப்படி, மீத்தேன் எரிவாயுத் திட்டம், பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்ததன் மூலம் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சிக்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன. மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியும், அதனால் இன்று வரை எந்த பயனும் ஏற்படவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சிகளின் அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான 149 சிறு - குறு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களை தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக அந்த எண்ணெய் வயல்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள எண்ணெய் வயல்களில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ளவை.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலாவதாக, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களில் எரிபொருள் வளம் இருப்பதை கண்டறிவதற்காக ரூ.13,000 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் கண்டறியப்பட்ட எண்ணெய் வயல்களை தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது பெரும் துரோகமல்லவா?
அதுமட்டுமின்றி, எண்ணெய் வயல்களை கையாளப்போகும் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்காக விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை விருப்பம் போல செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இதே சலுகைகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் கேட்ட போது வழங்க மறுத்து விட்ட மத்திய அரசு, இப்போது தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் அந்நிறுவனங்கள் இந்திய வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்ட வகை செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காவிரிப் படுகையில் உள்ள எண்ணெய் & இயற்கை எரிவாயு வயல்களில் இருந்து மிக அதிக அளவில் எரிபொருட்களை உறிஞ்சக்கூடியவை. இதனால் காவிரிப் படுகையில் பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படக்கூடும். ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் இந்த வயல்கள் இருந்தால் எவ்வளவு காலத்தில் காவிரிப் படுகை பாலைவனமாகுமோ, அதில் பாதி காலத்தில் இப்போது பாலைவனமாகும் ஆபத்து உள்ளது.
காவிரிப் பாசன மாவட்டங்களை சீரழிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது. ஓ.என்.ஜி.சி நிறுவனமோ, வேறு நிறுவனங்களோ காவிரிப் பாசன மாவட்டங்களில் எண்ணெய் வயல்கள் மற்றும் எரிவாயு வயல்களை நடத்தக்கூடாது என்பது தான் காவிரி பாசன மாவட்ட மக்களின் விருப்பமாகும். எனவே, காவிரி படுகையில் உள்ள அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மத்திய அரசு உடனடியாக மூட வேண்டும். அத்துடன் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தனிச் சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி அழுத்தம் தர வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.