நெல்லை மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார் கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 26-ஆம் தேதி முதல், 2020 மார்ச் 29-ஆம் தேதி வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளேன். இதன் மூலம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களிலுள்ள 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை நெல்லை மாவட்டத்தில் நன்றாகவே பெய்துள்ளது. அதுபோல வடகிழக்கு பருவமழையும் தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நன்றாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், கடலோர பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையில் 46.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை, பாளை பகுதியிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகர், பாளை மனகாவலம்பிள்ளை நகர், அண்ணாநகர், மேல குலவணிகர்புரம் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதை மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றி வருகிறார்கள்.
கொட்டி தீர்க்கும் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,421 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 134 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, இன்று 137.05 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 6 அடி மட்டுமே பாக்கி உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 578 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1645 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 3 அணைகள் மட்டுமே நிரம்பாமல் தண்ணீர் குறைவாக உள்ளது. இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார் கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.