வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர், நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மேலாக, திருநாவுக்கரசர் இந்த பதவியில் வகித்து வந்தார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரசில் உள்ள நிர்வாகிகள் வற்புறுத்தி வந்தனர். இதனையடுத்து நேற்று டெல்லியில் மேலிட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில், தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக காங்கிரஸ் கட்சி புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியாதவது: 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத் தொண்டனாகவே உழைத்து வந்துள்ளேன். எனக்குத் தலைவர் பொறுப்பு கொடுத்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம். தமிழகத்தில் அதிமுக-வையும் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவையும் வீட்டுக்கு அனுப்பப்படும். அவர்களால் நாட்டின் வளர்ச்சி முற்றிலும் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது எனக் கூறினார்,.