நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் - நீதிபதி கே.சந்துரு பேச்சு.!

ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேச்சு    

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 23, 2022, 08:05 PM IST
  • ‘ஜெய் பீம் தீர்ப்புக்கெல்லாம் முன்னோடி நீதிபதி மிஸ்ரா’
  • ‘தீர்ப்புகளை விமர்சித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் விவாதிக்க வேண்டும்’
  • ஆளுநர் பதவி என்பது தேவையா ? - ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.சந்துரு
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் - நீதிபதி கே.சந்துரு பேச்சு.! title=

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி சந்துரு, தான் எழுதிய நூலினை வெளியிட்டார். இதனை சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி பெற்றுக் கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கே.சந்துரு பேசியதாவது, ‘ஜெய்பீம் படத்தின் உண்மையான நாயகன் நான் இல்லை. சரியான காலகட்டத்தில் சரியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி மிஸ்ரா அவர்களே உண்மையான நாயகன். ஆட்கொணர்வு மனு என்பது மனித உரிமை மீறலை தடுப்பது. ஒரு மனிதனுடைய அநீதியை இந்த ஆட்கொணர்வு மனு மூலம் தடுக்க முடியும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்ரா அவர்கள் அளித்த தீர்ப்பு உறுதி செய்தது. 

மேலும் படிக்க | காசி விசுவநாதர் கோவில் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கிய நீதிமன்றம்

1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மிஸ்ரா, செங்கேணி வழக்கு, செஞ்சி ரீட்டா மேரி வழக்கு, அந்தியூர் விஜயா உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தார். இந்த வெவ்வேறு வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்து இழப்பீடு தொகையையும் பெற்றுக் கொடுத்தார்கள். இதற்கு முழு முக்கிய முதற்காரணம் நீதிபதி மிஸ்ரா. இதில் பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஏற்படுத்திய மாற்றம்தான், ஜெய் பீம் படத்தினுடைய விளைவு. வழக்கறிஞர்கள் எப்போதும் மக்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். செங்கேணிக்கு கிடைத்த நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஜெய்பீம் படத்தில் வந்த சம்பவத்தை விட மோசமான சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள சித்தலிங்கமடம் பகுதியில் நடைபெற்றது. நான்கு இருளர் பெண்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒரு திரைப்படத்தால் மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடாது. மனித உரிமை மீறல்களை எதிர்த்து வாதாட வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும். 

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!

அமைப்பு ரீதியாக செயல்பட்டால் இதுபோன்ற சித்திரவதைகளை சட்ட மாணவர்களால் தடுக்க முடியும். அதற்கான கட்டமைப்புக்குள் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் செய்கின்ற தொழில் மக்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, நம்மை வளர்த்துக் கொள்வதற்கு இல்லை. சட்டக் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நீதிபதிகளின் சர்வாதிகாரப் போக்கை நாம் காண்கிறோம். அந்த போக்கைச் சரிவர கொண்டு செல்வதற்கு சட்ட மாணவர்களின் விமர்சனம் கண்டிப்பாக தேவை. சட்டக் கல்லூரிக்கும், அரசியலுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை. சட்டத்தின் ஒரு பகுதிதான் அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் உருவாக்கிய ஓர் மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஆளுனரின் பதவி தேவையா என்ற கேள்வியும் மாநில அரசின் அதிகார வரையறை என்ன என்ற கேள்வியும் வருகின்றது. இது போன்று தினம் தினம் ஒவ்வொரு பிரச்சினைகள் விவாதத்திற்கு வருகின்றன. தினசரி வருகின்ற இதுபோன்ற பிரச்சனைகளை சட்டக்கல்லூரி மாணவர்கள் விவாதிக்க வேண்டும். ஏதோ அரசியல்வாதிகள் மற்றும் இரண்டு கட்சிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனை என்று இதனைப் பார்க்காமல் ஒவ்வொரு குடிமக்களையும் பாதிக்கக்கூடிய பிரச்சனை என்று பார்க்க வேண்டும். இது உங்களுடைய பிரச்சனை. உங்களுடைய பிரச்சனையை நீங்கள் தான் விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் நமக்குத் தொடர்பு உள்ளது.

மேலும் படிக்க | சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நாம் மௌனமாக இருந்தால் இந்த நாடு ஒரு சோசலிச, மதசார்பற்ற, இறையாண்மை பெற்ற குடியரசு நாடாக இருக்க முடியாது. ஒவ்வொரு மக்கள் பிரச்சனைகளிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தலையிட வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தங்களது பிரச்சனையாக கருத வேண்டும். மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டம் தான் இந்த அரசியலமைப்பு சட்டம். நமது திறமை மற்றும் அறிவு அனைத்தும் பொது மக்களுக்கு பயன்பட வேண்டும்’ என்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் தலைவர் கல்யாணி, சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News