சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா சீராய்வு மனு விசாரணை இன்று இல்லை

Last Updated : Aug 2, 2017, 12:56 PM IST
சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா சீராய்வு மனு விசாரணை இன்று இல்லை title=

சொத்து குவிப்பு வழக்கு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைக்கு  இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் இவர்களை கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்து நீதிபதிகள் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்து உத்தரவிடப்பட்டது.

இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மறு சீராய்வு செய்ய சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மதியம் 1.30 மணிக்கு விசாரணை வரும் என பட்டியலில் இருந்தது. திருத்தப்பட்ட பட்டியலில் சசிகலா மறு ஆய்வு மனு இடம்பெறவில்லை.  இந்நிலையில் சசிகலா மனு இன்று விசாரணை இல்லை என்று தகவல் வெளிவந்து உள்ளது.

Trending News