காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!
கரூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் அன்று அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய பகல் 11 மணியில் இருந்து 12 மணி வரையும், காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய 12 மணியில் இருந்து 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
வேட்புமனு தாக்கல் தினத்தன்று திமுக கூட்டணி கட்சியினர் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆட்சியல் அலுவலகம் வந்தடைந்தனர். இதனால் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதில் சற்று காலதாமதம் ஆனது. இதற்கிடையே திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் ஆட்சியர் அறைக்கு செல்லும் வழியில் இருந்த முதல் கதவை திறக்கும்படி தெரிவித்துள்ளனர்.
உள்ளே அதிமுக-வினர் இருப்பதால் அவர்கள் வெளியே வந்த பின்னர் தான் கதவை திறப்போம் என்று அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தெரிவித்தனர். இதனால் கால்துறை அதிகாரிகளுடன் திமுக., கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் டி.எஸ்.பி., செந்தில் பாலாஜியை கையால் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரி அன்பழகனிடம், காவல்துறை அடக்குமுறை குறித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர், புகார் தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் வேட்புமனுதாக்கலின் போது காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாகவும், தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.