கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும் வழங்கினார். இந்நிலையில் இன்று காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் புயல் சேதம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து மாலையில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அப்போது கஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை பிரதமரிடம் வழங்குவார் என கூறப்படுகிறது.
மேலும் முதற்கட்ட நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என தெரிகிறது.