குழந்தை சுர்ஜித் வந்தாதான் அனைவருக்கும் உண்மையான தீபாவளி என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் உருக்கமாக பதிவு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 40 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நானும் ஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில், சுர்ஜித் பெற்றோரின் வலியை உணரமுடிகிறது என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளார் ட்விட்டர் பதிவில், ‘நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில் என்னால் சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்தை உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி’ என்று ஹர்பஜன்சிங் பதிவிட்டுள்ளார்.
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2019
இதை தொடர்ந்து, குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தீபாவளி வாழ்த்துகள் கூறி நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் மேலும், ‘ஆழ்துளை கிணறுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களும் கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தையை மீட்க அரசு மற்றும் அதிகாரிகள் விடாமுயற்சியுடன் முயற்சிக்கின்றனர்; அதை குறை சொல்ல முடியாது’ என்றும் ரஜினி கூறியுள்ளார்.