அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: MK.ஸ்டாலின்!

அரசு மருத்துவர்கள் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

Updated: Aug 27, 2019, 02:15 PM IST
அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: MK.ஸ்டாலின்!

அரசு மருத்துவர்கள் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்!!
 
ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் தேவை கருதியும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் அவசர முக்கியத்துவம் கருதியும் அரசு மருத்துவர்கள் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கடந்த 23.8.2019 முதல் ‘நான்கு அம்சக் கோரிக்கைகளை’ வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றரை ஆண்டாக, காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்காதது, மருத்துவர் பணியிடங்கள் குறைப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்து, முதுநிலை மருத்துவப்படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி பணி வழங்காமை உள்ளிட்ட இந்த நான்கு கோரிக்கைகளையும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், அவற்றை நிறைவேற்றுவதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டிய அலட்சியமே, இன்றைக்கு சாகும் வரை போராட்டம் நடத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்’ நடத்தி- மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என்று ஒரு பழைய நாடகத்தை புது வேடமணிந்து அரங்கேற்றியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இதோ எங்கள் குறைகள். தீர்த்து வையுங்கள்” என்று முறையிடும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசக் கூட மனமின்றி உதா சீனப்படுத்துகிறார்; வெளிநாடுகள் பயண ஏற்பாட்டிலேயே கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்துகிறார்.

மருத்துவர்களின் மேற்கண்ட நான்கு கோரிக்கைகள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான அவசர சிகிச்சையை வழங்க முடியாத சூழல் அரசு மருத்துவமனைகளில் உருவாகியுள்ளது.

அங்கே இருக்கும் அரசு மருத்துவர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்கடுக்கான பல ஆபத்துகள் அரசு மருத்துவமனைகளை அன்றாடம் பயன்படுத்தும் மக்களுக்கு இருந்தும், அதுபற்றித் துளியும் கவலைப்படாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களை உடனே அழைத்து, அக்கறையுடன் பேசி அவர் களின் கோரிக்கையை முறையாக உடனடியாகப் பரிசீலனை செய்து நிறை வேற்றவும், அசவுகரியங்களுக்கு உள்ளாகியிருக்கும் உள்நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அவசரகால சிகிச்சைக்காக வருவோரின் சிரமங்களைப் போக்கி, மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஜனநாயக ரீதியிலான போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அதிமுக அரசிடம், இந்த மெத்தனத்தையும், அலட்சியத்தையும் விட வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது என்பதால், மக்களின் தேவை கருதியும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப்பணியின் அவசர முக்கியத்துவம் கருதியும் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், அரசு மருத்துவர்களின் கோரிக்கை பரிவுடன் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்க விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.