PMK:மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்க நடவடிக்கை தேவை

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2021, 10:31 AM IST
  • மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்க நடவடிக்கை தேவை என பாமக கோரிக்கை
  • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது
  • மேகதாது அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை
PMK:மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்க நடவடிக்கை தேவை title=

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்குமிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி கண்காணிப்புக் குழுவை அமைக்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்: அதன் சாரம்சம் பின்வருமாறு:

தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று அறிவித்திருக்கிறார். கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். அது சரியானது தான் என்றாலும் கூட, அதை விட மிகவும் முக்கியமான விஷயத்தை தமிழக அரசு கோட்டை விட்டு விட்டது. இன்னும் கேட்டால் இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு தான், மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அணையை கட்டுவோம் என்று கூறும் துணிச்சலை எடியூரப்பாவுக்கு அளித்துள்ளது.

Also Read | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூன் 21-ம் தேதி திமுக MLA-க்கள் கூட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில், அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்களை கர்நாடகம் குவித்து வருவதாக  கடந்த ஏப்ரல் 14&ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்பாயத்தின் தென் மண்டல அமர்வு, மேகதாது பகுதியில் அணை கட்டுமானத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 உறுப்பினர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்தது.

அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, மேகதாது அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும், அணைக்கு அனுமதி கோருவதற்கான கர்நாடக அரசின் விண்ணப்பம் மத்திய அரசிடமும் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தலையிடத் தேவையில்லை என்று கூறி வழக்கை  முடித்து வைத்து விட்டது. அதனால், மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு  ஈடுபட்டதா? என்பதை கண்டுபிடித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்துவிட்டது.

மேகதாது அணை தொடர்பான அனைத்து விவகாரங்களும் உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் நிலுவையில் உள்ளன என்பதை மட்டும் தான் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கருத்தில் கொண்டதே தவிர, மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டதா? அதனால் சுற்றுசூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை வலியுறுத்தி வெற்றி பெற தமிழக அரசின் வழக்கறிஞர் தவறி விட்டார்.

Also Read | மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா?

இது தொடர்பான வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு முடித்து வைத்து விட்டதால், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு விட்டன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கவில்லை என்று நிரூபிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழகம் தவறிவிட்டது.

மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதி அளிக்காத நிலையில், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் செய்திருந்தால் அது மிகப்பெரிய  விதிமீறல் ஆகும். மேகதாது அணை தொடர்பான வழக்கில் அது தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு உதவும். கர்நாடக அரசின் விதிமீறலை உறுதி செய்வதற்காக மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தேர்ந்தெடுத்துள்ள பகுதியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

எனவே, மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழு அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Read | மருத்துவ சிகிச்சைக்காக இன்று ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News