தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவக் காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரம் பொறுத்தவரையில் அதிகபட்சமாக அரியலூர் நகர் பகுதிகளில் 9 செண்டி மீட்டரும் தர்மபுரி மாவட்டம் அரூரில் 8 செண்டி மீட்டரும், மழை பதிவாகி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை, விருதுநகர், நாகை மற்றும் மதுரை மேட்டுப்பட்டியில் தலா 5 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.