பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்வபுரத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மல்லிகா என்ற தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்வதற்காகவே தன்னை இடமாற்றம் செய்துள்ளதாக ரங்கநாதன் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் ரங்கநாதனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஆனால் தலைமை ஆசிரியர்கள் ரங்கநாதன், மல்லிகா ஆகியோர் இடையேயான தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதால், அதற்கு ஈடாக இருவரும் அவரவர் பணிபுரியும் பள்ளி வளாகங்களில் தலா 50 மரக்கன்றுகளை நட வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார், மேலும் அதைக் கண்காணித்து மரம் நட்டது தொடர்பாக கோவை மாநகரராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் அரசிடம் ஊதியம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பண லாபத்திற்காக தனியாக தனிவகுப்பு எடுக்கின்றனர், இது விதிமுறைகளுக்கு முரணானது. அதுபோன்று தனியாக தனிவகுப்பு எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, விதிகளைப் பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிபதி அரசுக்கு அறிவுறுத்தினார்.
இதுதவிர பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சமீப காலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுதொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த தொலைபேசி எண் வாயிலாக புகார் அளிக்கப்பட்டால், புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.