கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பு சம்பவங்கள் நடத்து முடிந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணையலாம் என தகவல்கள் வெளியாகியது. தகவல்கள் வெளியாகிய நிலையில்
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை தலைமையகத்தில் நடைபெறுகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் இணைப்பு தொடர்பாக இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. பிரிந்த கட்சி இணையுமா என்று அதிமுக தொண்டர்களும் 6 மாதங்களாக தவித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை நேற்று முன்தினம் ஏற்பட்டது.
முதல் அமைச்சர் வீட்டில் அவருடன் அமைச்சர்களும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவருடன் அவரது ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினர்.
இவ்வாறு இரு அணிகளும் ஆலோசனை நடத்திய நேரத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுமார் 5 மணி நேரம் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அதிமுக தொண்டர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேர்தல் கமிஷன் கட்சி பெயர், சின்னம் முடக்கி வைத்ததை விலக்கிக் கொள்ள நடை முறைகளை மேற்கொள்ள காலஅவகாசம் பிடிக்கும்.
எனவே அதுவரை கட்சியை நடத்த வழிகாட்டும் குழு அமைத்து செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நாளைக்குள் இரு அணிகள் இணைந்துவிடும், 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும், மக்களின் அன்பைப் பெறவும் இணைப்பு நடைபெறுகிறது என கூறியுள்ளார்.