ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உலகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
நிரந்தர சட்டம் கொண்டு வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்களை போலீசார் வல்லுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்ததால் வன்முறையாக வெடித்தது.
வன்முறை ஏற்பட்டபோது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று போராட்டம் நடந்த மெரினா கடற்கரையில் ஆய்வு செய்தனர். இதையடுத்து போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது குறித்தும், காவல் நிலைய தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.