தமிழ்நாட்டில் குடிபழக்கம் என்பது குற்றச்சம்பவங்கள் முதல் பல்வேறு பயங்கர சம்பவங்களுக்கு வழிவகுப்பதில் முதன்மையான ஒன்றாக உள்ளது. குடிபழக்கம் என்பது மக்களின் அன்றாட வாழ்வை பல்வேறு வகையில் பாதிக்கிறது என்பதை பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்கூறுகின்றன. இதனால், பல்வேறு ஆண்டுகளாக மதுவிலக்கு குறித்த பேச்சுகள் களத்திலும், அரசியல் தளத்திலும் பெரும் பேசுபொருளாய் இருந்து வருகிறது.
மதுவிலக்கு என்பது ஒரு கனவுத்திட்டம் இல்லை என்றாலும், மது விற்பனையை குறைக்க அரசு தரப்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. இதன் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 500 டாஸ்மாக் கடைகளை மூடியது. இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்றாலும், இன்னும் செல்ல வேண்டிய பாதை வெகுதூரம் உள்ளது எனவும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஏனென்றால், மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது, விற்பனை நேரத்தை மாற்றுவது ஆகியவை மதுவிலக்கின் பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
தொடர்ந்து, குடிபழக்கத்தால் ஏற்படும் பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வரும். அதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (27). இவர் 6 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிகிதாவை (26) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நிகிதா அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி கணவனை திருத்த பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார். அனைத்து போராட்டங்களும் தோல்வியுற்றன.
அந்த வகையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி இரவில் மீண்டும் தாஸ் அதிக போதையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். கடைசி முயற்சியாக கணவனை திருத்துவதற்காக தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு நீ குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றால் நான் கொளுத்திக் கொள்வேன் என்று கூறி தீக்குச்சியை பற்றவைத்து கணவனை மிரட்டி உள்ளார்.
எதிர்பாராத விதமாக தீ நிகிதாவின் உடையில் பிடித்து உடல் முழுவதும் எறிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தாஸ் நிகிதாவை கட்டிப்பிடித்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதில், தாஸ் மீதும் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிகிதா கடந்த ஆக. 2ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 40% தீக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாஸ், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடிப்பழக்கத்திலிருந்து காதல்கணவனை மீட்டெடுக்க போராடிய பாசக்கார மனைவியின் விபரீத செயலால் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இல்லை ஏன்? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ