தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்க சித்திரை திருநாள் வகை செய்யட்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமையும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு காலத்தில் சித்திரை மாதம் செல்வம் பொங்கும் மாதமாக திகழ்ந்தது. காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஆனால், அவையெல்லாம் இப்போது வலி கொடுக்கும் கனவாகிவிட்டன.
இந்தியா விடுதலை அடைந்த நாள் முதல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டவர்கள் அனைத்து வகை அதிகாரங்களையும் தாங்களே சுவைக்க வேண்டும் என்பதற்காக கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டனர். மாநில சுயாட்சி என்று முழங்கி, தமிழகத்தில் ஆட்சி செய்தவர்களும் உரிமைகளை தாரை வார்த்து துரோகம் செய்தனர். அவ்வாறு தாரை வார்க்கப்பட்ட உரிமைகளில் மிகவும் முக்கியமானது காவிரி ஆற்று நீர் உரிமை. அந்த துரோகம் தான் செழிப்பாக அமைய வேண்டிய சித்திரைத் திருநாள், இப்போது வறட்சியோடும், வறுமையோடும் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாகி விட்டது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தாரை வார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேறவும், வளமான, மகிழ்ச்சியான தமிழகம் என்ற கனவு நனவாகவும் அற்புதமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதற்கு சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும்; உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.