நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது. இன்று வாக்குபதிவின் போது சில இடங்களில் வன்முறை சம்பமும் அரங்கேறியது.
அதில் கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீரவநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே இடையே ஏற்பட்ட மோதலில் பா.ஜ.க. வை சேர்ந்த ஐந்து பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. அந்த கத்திக்குத்து சம்பத்தில் மணிகண்டன், சதீஷ்குமார் உள்பட பாஜக தொண்டர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோல வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால், கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கூட்டம் ஓட்டம் பிடித்ததால், அப்போது ஒரு சிலர் காயமடைந்தனர். இந்த வாக்குசாவடியில் ஒரு மணி நேரம் வாக்குபதிவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.