தமிழக அரசியலில் அதிர்வலைகளை உண்டுபண்ண பேட்டிகளும், அறிக்கைகளும், உரைகளும் இருந்த சூழலில், தற்போது அந்த வரிசையில் போஸ்டர்களும் சேர்ந்துக்கொண்டன. இன்னும் சுருங்கச்சொன்னால் இந்த போஸ்டர் அரசியலை அதிமுகவினரே முன்னெடுத்துள்ளனர் என்றுகூட சொல்லலாம். ராயப்பேட்டை அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமைக் குறித்து அளித்த அந்தப் பேட்டிதான் தீப்பொறியாக அமைந்தது. அதன்பிறகு நடந்ததெல்லாம் கடந்த ஒரு மாத கால செய்திகள்.
மேலும் படிக்க | ஓபிஎஸ் உடன் கை கோர்கிறாரா டிடிவி, போஸ்டர் அடித்து தெறிக்கவிட்ட தொண்டர்கள்!
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பேட்டிகள் எந்தளவுக்கு முக்கியத்தும் பெற்றதோ, அதே அளவுக்கு இந்த சர்ச்சைகளுக்கு போஸ்டர்கள் பெரும் பங்கு வகித்தன. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கம், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் என மாய்ந்து, மாய்ந்து போஸ்டர்களை அடித்துத் தள்ளினர். அதில் பல போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் செய்தன. அந்த வரிசையில் மதுரையில் புதிதாக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று, அதிமுகவினரிடையே மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜீலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு காரணம், கடந்த அதிமுக பொதுக்குழுவில் நடந்த சலசலப்புதான். கொங்குப் பகுதி அதிமுகவினர் பெரும்பாலும் இ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு கூற்றுண்டு. அதே நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக அதிமுகவினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் பேசும்போது இ.பி.எஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இதனால் பாதியிலேயே ஓ.பி.எஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அதுமட்டுமில்லாமல், ஒ.பி.எஸ் மீது காகிதங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்குதல் முயற்சியும் நடந்தது. உச்சக்கட்டமாக, ஓ.பி.எஸ் வந்த வாகனம் பஞ்சர் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை பலரும் கண்டித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குறிப்பிட்ட சமுதாய அமைப்புகளும், அதிமுக தொண்டர்களும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில், மதுரையில் முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரில்தான், அதிமுக பொதுக்குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் என்றும், அவரை சபையில் அவமானப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சபை நாகரீகம் தெரியாத நன்றி மறந்த எடப்பாடி. பழனிச்சாமி என்று காட்டமாக வரிகள் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டரில், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழ கூட்டத்தில் வன்முறையைத் தூண்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட சிலர் திட்டமிட்டிருப்பதால் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தமிழக முதல்வரும், காவல்துறை தலைவரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்தப் போஸ்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR