சென்னை: இந்த நாள் எனக்கு மகிழ்சியான நாள். எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற "நான் குற்றம்சாட்டுகிறேன்" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது தேசத்துரோகம் (123ஏ), பிரிவினையைத் தூண்டுதல் (153ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ, அதே ஆண்டு மே 25 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.
இன்று வழக்கின் தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில், தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி எனவும், வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி ஜே. சாந்தி, இன்று தீர்ப்பளித்தார். வைகோவுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது குற்றமல்ல என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு. நான் தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். நான் பேசியது தேசதுரோகம் அல்ல எனக் கூறினார்.