கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு!

கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகை திறந்து வைத்தார்.

Last Updated : Aug 29, 2019, 02:26 PM IST
கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு! title=

கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகை திறந்து வைத்தார்.

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இருபோக பாசனம் நடைபெறும் இந்த பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணை நீர் ஆதாரமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதாலும் தண்ணீர் திறப்பது காலதாமதம் ஆனது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியதை முன்னிட்டு முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 131.10 அடி வரைத் தொட்டது.

இதை தொடர்ந்து முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் பேரில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதகு பகுதியில் பூஜை செய்து பொத்தானை அழுத்தி அணை மதகை திறந்து வைத்தார். கம்பம் பள்ளத்தாக்கிற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முன்னதாக தேக்கடியில் உள்ள வன துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் மதகு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் முன்பு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. முதல் போக பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுக்காவில் 11 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் நிலம், போடி தாலுகாவில் 488 ஏக்கர் நிலம் வீதம் மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயன் அடைய வேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டால் முறை வைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Trending News